கண்கள் சொல்லும் கதைகள்! கதை 1

 

கண்கள் சொல்லும் கதைகள்!

கதை 1

 

சென்னை மாநகரம்!

 

அது ஒரு நடுத்தர மக்கள் வாழும் பகுதி!

 

மணி இரவு பனிரெண்டு என்று காட்டியது.

 

அவளின் கணவனுக்காக காத்துக்கொண்டு இருந்தாள் மாதவி. கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது. வெறும் இருபத்தியொரு வயது தான் இருக்கும். அதற்குள் மூன்று வயது குழந்தைக்கு தாயாகி விட்டாள்.

 

விருப்பமே இல்லாத திருமணம். ஊதாரி தந்தைக்கு பிள்ளையாக பிறந்ததால் வந்த வினை என்று கூட சொல்லலாம். நன்றாக படிக்கும் பெண் தான் அவள். பனிரெண்டாம் வகுப்பில் கூட நல்ல மதிப்பெண்கள் தான் பெற்று இருந்தாள்.

 

ஆனால் பெண் பிள்ளைகள் படித்து என்ன சாதனை செய்ய போகிறார்கள் என்கிற நல்ல எண்ணம் இருக்கும் தந்தைக்கு பிள்ளையாய் பிறந்து விட்டு இருந்தாள். வாயும் அதிகமாக பேச மாட்டாள். அவளின் தாயும் அவளை போல தான். ஒரே பெண் வேறு!

 

நல்ல வரன் வந்தது என்று நினைத்து கட்டி கொடுத்து இருந்தார்கள். திருமணத்திற்கு பின்பு தான் தெரியும் அவன் எத்தகைய மொடா குடிகாரன் என்று!

 

குடித்து மட்டும் வந்தால் கூட பரவா இல்லை! குடியோடு நிறுத்தி விடுவானா என்ன? அடித்தால் கூட வாங்கி விடலாம் ஆனால் சொல்லால் அடித்து வன்புணர்வு செய்யும் அவனை என்ன செய்ய முடியும்? அவனின் தாயிடம் இதை ஒரு முறை கூறியே விட்டாள்.

 

அவனது தாயோ, "ஆம்பளைங்கன்னா அப்படி தான் இருப்பாங்க... பொம்பள நீ தான் அனுசரிச்சு போகணும்" என்று சொல்லி சொல்லியே அவளை அமைதி ஆக்கி விடுவார்.

 

அச்சு பிசறாமல் இதையே தான் அவளது தாயும் கூறுவார்கள்.

 

வாழ்க்கை வெறுத்தே போனது அவளுக்கு! செத்து போய் விடலாமா? என்று அவள் நினைக்கும் சமயம் தான் அவளுள் மற்றோரு ஜீவன் இருப்பது அவளுக்கு தெரிய வந்தது.

 

அதிர்ச்சி தான்! அவளாலேயே இந்த நரகத்தில் இருக்க முடியவில்லை. இதில் மற்றோரு உயிரா என்று தான் தோன்றியது. ஆனால் தோன்றிய உயிரை அழிக்கும் அளவிற்கு அவள் ஒன்னும் அரக்கி கிடையாதே!

 

குழந்தையையும் ஈன்று எடுத்தாள். பெண் பிள்ளை! அவளை போல அச்சு பிசறாமல் பிறந்து இருந்தாள் அவளது மகள். "இளநிலா" என்று பெயர் சூட்டினாள்.

 

அதில் கூட அவளது கணவனிற்கு உடன் பாடில்லை.

 

"பொட்டை பிள்ளை பெத்து கொடுத்து இருக்கா? இப்போ இதுக்கு சீறு செஞ்சே என் காசை நான் காரியாக்கணும். உன் அப்பன் தான் ஒரு பொட்டு நகை கூட போடாம உன்னை என்கிட்ட கூட்டி கொடுத்துட்டான். நானும் உன் அப்பனை மாதிரி இருக்க முடியுமா?" என்று கேட்டு கேட்டே அவளை சித்திரவதை செய்தான்.

 

அவளால் இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. அவளது கணவன் அவளது தந்தை வேலை செய்யும் அதே தொழிற்சாலையில் தான் நல்ல உத்தியோகத்தில் இருந்தான். அவனை வளைத்து போடவே வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து மாதவியை பிடிக்க வைத்து விட்டார். ஆனால் மாதவிக்கு தான் அவனை கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை.

 

அவனின் பார்வையில் காதலை விட காமம் தானே அதிகமாக இருந்தது. ஆதலாலேயே அவனின் மீது அவளுக்கு நாட்டம் என்பதே இல்லை என்று கூட சொல்லலாம்.

 

ஆனாலும் அவளை விட்டால் தானே! என்னன்னவோ சொல்லி திருமணம் செய்து விட்டார்கள். நரகத்தின் முதல் படி!

 

அவளது வாழ்வையே புரட்டி போட்ட தருணம். பதினெட்டே வயதில் தாம்பத்யம் என்கிற பெயரில் அவரை சூறையாடி விட்டு எச்சில் இலை போல் தூக்கி போட்டு சென்று இருந்தான் அந்த கயவன்.

 

இவ்வளவு ஏன் சூறையாடிய பிறகு அவனின் மார்பில் கூட படுக்க அவளுக்கு அனுமதி இல்லை. ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை, இதுவே தினசரி வழக்கம் என்றால் அவளும் என்செய்வாள்?

 

அவளுக்கு இந்த திருமணத்தில் கிடைத்த ஒரே ஆறுதல் அவளது மகள் இளநிலா. அவளது மழலை மொழியில் தான் அவளது சுவாசமே இயங்கி கொண்டு இருக்கிறது.

 

ஆனாலும் சித்திரவதை தான் நின்ற பாடு இல்லை. பாவம் அவளுடன் சேர்ந்து இப்பொது அந்த மூன்று வயது சின்ன சிட்டும் கூட அவனின் வசைபாடுகளை வாங்கி கொண்டு இருக்கிறது.

 

என்றாவது ஒரு நாள் விடியல் வராதா என்று ஏங்குகிறது அவள் மனம். பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த பெண்ணிற்கு என்ன வேலை வெளியில் கிடைத்து விட போகிறது? சாப்பாட்டிற்கு கூட அவனிடம் கை ஏந்தி நிற்க வேண்டிய நிலை.

 

அவள் மட்டும் என்றால் கூட பிச்சை எடுத்து பிழைத்து கொள்வாள். ஆனால் அவளுடன் சேர்ந்து அந்த மூன்று வயது சிறுமியும் இருக்கிறாள். அவளுக்கு சாப்பிட கொடுத்தாக வேண்டுமே! அமைதி காக்க வேண்டிய சூழ்நிலை.

 

மனதில் மகிழ்ச்சி இல்லை, உடலில் உயிர்ப்பு இல்லை. அவள் கண்களே ஆயிரம் கதைகள் சொல்லும்... இன்றைய பெண்களும் வாழ்க்கையும் அது தானே! அவர்கள் கண்களிடம் கேட்டு பாருங்கள், எழுத்தாளர்களை விட ஆயிரம் கதைகள் சொல்லும்... எழுத்தாளர்களின் கைப்பேனாவை காட்டிலும் உணர்ச்சிகள் மிகுந்தவை பெண்களின் கண்கள். கண்ணீர், உவகை, ஆச்சர்யம் என்று அனைத்து உணர்வுகளையும் சொல்லால் அல்லாமல் கண்களால் உணர்த்தும் பெண்கள் தான் அதிகம்.

 

பெண்களில் கண்களில் தான் எத்தனை உணர்ச்சிகள்? ஆனால் அந்த கண்களுக்கு வலிகள் தருவதே தான் பல ஆண்களின் வேலையாக உள்ளது.

 

அனைத்தையும் நினைத்து கொண்டு இருந்தவளுக்கு நெஞ்சே அடைத்தது. எப்படி பட்ட வாழ்க்கை? எதை நோக்கி பயணிக்கிறது என்றே தெரியாத ஒரு வாழ்க்கை. குழந்தைக்காக என்று நினைத்து கொண்டே வாழ்க்கை முழுக்க இந்த அரக்கனை சகித்து கொண்டு இருக்க வேண்டுமா என்று தான் அவளது எண்ணம். ஆனால் வெளியே செல்லவும் முடியாத நிலை!

 

அவளது தேகமோ எனக்கும் கொஞ்சம் ஓய்வு கொடு என்று சொல்லி, சிறிது நேரம் அவளையே அறியாமல் கண்ணயர்ந்து இருந்தாள்.

 

தீடிர் சத்தத்தில் எழுந்து அமர்ந்தாள்.

 

கதவு தட்டும் சத்தம் கேட்டது. மாதவியின் கை கால்கள் எல்லாம் நடுங்க துவங்கியது.

 

எச்சில் கூட்டி விழுங்கினாள்.

 

"ஹே! கதவை திறடி *****" என்று கெட்ட வார்த்தைகள் வேறு சரளமாகவே வந்தது.

 

அவளது மணவாளன் தான் குணவாளன். குணமே இல்லாத அவனுக்கு குணவாளன் என்று பெயர் சூட்டி இருந்தனர்.

 

அவளுக்கு இதை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்று கூட தெரியவில்லை.

 

போய் அவள் கதவை திறந்ததும், பளார் என்று ஒரு அரை!

 

"கதவை திறக்க எவளோ நேரம்? அப்படி என்ன டி புடிங்கிட்டு இருந்த?" என்று நாகுழற, நடக்கவே முடியாமல் குடித்து விட்டு வந்து இருந்தான்.

 

ஒரு அறையை பார்த்தான். மூடி இருந்தது. அவர்களது மூன்று வயது குழந்தை இளநிலா தான் தூங்கி கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தது.

 

அப்படியே அவன் மாதவியின் புறம் தான் திரும்பினான்.

 

அவளுக்கு இப்போது தான் இன்னும் கிலி எடுக்க துவங்கியது. அவனின் பார்வையே அவன் என்ன செய்ய காத்து இருக்கிறான் என்பதை உரைக்க, விக்கித்து நின்றாள் பெண்ணவள்.

 

இவ்வளவு குடித்து விட்ட பிறகு அவளை நெருங்கினால், அவளை வன்புணர்வு மட்டும் அல்ல, இன்னும் என்ன என்ன செய்வான் என்று அவளுக்கு தெரியும். கலவியில் கொடுமையான வகைகளை அவளுக்கு சொல்லி கொடுத்து இருந்தான். கேட்டால் அவன் "அல்பா மேலாம்" அவனுக்கு இப்படி அதிகாரம் செய்ய தான் பிடிக்குமாம்.

 

கட்டிலில் கூட அதிகாரம் என்கிற பெயரில் அவளை அடக்கி வைக்கிறான். அவளுக்கு கலவி என்றாலே ஒரு வித பயம்.

 

இன்றைக்கு அவளுக்கு மாதவிடாய் வேறு இருந்தது.

 

அது சொன்னாலும் விட போவது இல்லை என்று அவளுக்கு தெரியும். ஆனாலும் ஒரு வித தைரியத்தை வரவழைத்து கொண்டு, "இன்னைக்கு பீரியட்ஸ் வேணாமே" என்று மிகவும் தடுமாறி தான் சொல்லி இருந்தாள்.

 

அவனோ புன்முறுவலுடன், "அதனால என்ன? நீ மாசமா இருந்த போதே உன்னை விட்டது இல்ல... இதுக்கு எல்லாம் விட போறேனா?" என்று கேட்டவன் அவளின் கையை பற்ற, அவளுக்கோ இல்லை என்றும் சொல்ல முடியாத நிலை.

 

அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.

 

அவளை படுக்கையில் தள்ளியவன், அவளின் கண்களை பார்த்து புன்னகைக்க வில்லை. அவளின் கன்னத்தை வருடவில்லை, இதழை சுவைக்கவில்லை, அவளின் வெட்கத்தையும், நாணத்தையும் கூட தூண்டவில்லை.

 

காஞ்ச மாடு போல அவளின் உடைகளை எல்லாம் கலைக்க ஆரம்பித்து இருந்தான்.

 

அவளிடம் ஒரு உணர்வு கூட இல்லை. கண்களில் கண்ணீர் மட்டும் தான்.

 

கணவனே கற்பழிக்கும் இழிநிலை! பல பெண்களின் அவல நிலை! அவன் என்றாவது ஒரு நாள் திருந்தி விடுவான் என்று நினைத்து கொண்டு வாழும் பெண்கள் தான் எத்தனை பேர்?

 

கணவன் என்பதற்காக கற்பழிப்பு தவறான செயல் இல்லை என்று ஆகிவிடுமா என்ன?

 

யார் செய்தாலும் தவறு தவறு தானே? ஆனால் திருமணத்திற்கு பிறகு நடக்கும் எந்த செயலையும் நாம் தவறு என்று சொல்லுவதே இல்லை.

 

அவனின் தேவை தீர்ந்து அவன் படுத்து உறங்கி விட்டான்.

 

பாவை அவளுக்கு தான் உறக்கம் தொலைந்து போனது.

 

அவளின் மேனியின் மீதே அவளுக்கு அத்தனை வெறுப்பு. அவளின் உடம்பே தீ பற்றி எரிந்தது போன்று தான் அவளுக்கு தோன்றியது.

 

மணி அப்போது இரண்டு! ஆனாலும் அவளுக்கு குளிக்க வேண்டும் போல் தான் இருந்தது. போய் தண்ணீரின் கீழ் நின்றாள். தண்ணீருடன் சேர்ந்து அவளின் கண்ணீரும் கரைந்தது.

 

அவளின் மேனியை தேய்த்து கழுவினாள். அவனின் வாசனையே இருக்க கூடாது என்கிற அளவிற்கு தேய்த்தாள்.

 

கதறி அழுது முடித்து வெளியே வந்தவளுக்கு அவனுடன் சென்று படுக்க மனமில்லை. கால்கள் தாமாக அவளின் மகளின் அறைக்கு தான் சென்றது.

 

கதவை திறந்ததும், தலையணைக்கு நடுவில் அங்கு அவளின் அழகு நிலவு மகள் தான் உறங்கி கொண்டு இருந்தாள்.

 

அவளை பார்த்ததும் கொஞ்சம் மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்த உணர்வு.

 

ஒரு பக்க தலையணையை எடுத்து விட்டு அவளின் அருகே சென்று படுத்து கொண்டாள்.

 

விழிகள் தாமாக மூடின.

 

அடுத்த நாள் விடிய, மாதவி எழுந்து பார்த்தாள். காலை ஏழு மணி என்று காட்டியது. இன்று விடுமுறை நாள் வேறு! அவனுக்கு வகைவகையாக சமைக்க வேண்டும் இல்லை என்றால் அதற்கும் திட்டு விழும்.

 

கண்களில் கொஞ்சம் கூட மகிழ்ச்சி இல்லை. ஏதோ இயந்திரம் போல் எழுந்து சென்று குளித்து விட்டு வந்தாள்.

 

அவள் சமயற்கட்டிற்குள் நுழைய இருந்த சமயம், அவளின் வீட்டின் கதவுகள் தட்ட பட்டன.

 

"இந்த நேரத்துல யாரு?" என்று முணுமுணுத்து கொண்டே அவள் கதவுகளை திறக்க, அங்கு நின்று கொண்டிருந்தவனை பார்த்தவள் கண்கள் விரிந்தன.

 

அங்கே நின்று கொண்டிருந்தான் வீர ராவணன்.

 

குணத்தின் பெயரை தாங்கி இருக்கும் குணவாளனே இப்படி இருக்கையில் ராவணன் எப்படியோ?


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 2