கண்கள் சொல்லும் கதைகள்! கதை 7

 

கண்கள் சொல்லும் கதைகள்!

கதை 7

 

"நிலா" என்று ஓடி வந்து இருந்தான் எட்டு வயது ராவணன்.

 

"அண்ணா" என்று பள்ளியில் இருந்து வரும் அண்ணாவை நோக்கி, அவளின் பிஞ்சு கால்களில் இந்த பூமிக்கும் வலி எடுக்காமல் ஓடி கொண்டு வந்து இருந்தாள்.

 

அவளுக்கு அன்னையை விட அண்ணா தான் உயிர்.

 

அவர்களின் அன்னை தமிழரசிக்கு வயலில் வேலை பார்ப்பவர்களுக்கு உதவி செய்து கொண்டு, அவர்களுக்கு தினக்கூலி வழங்கி விட்டு வருவதற்கே நேரம் சரியாக இருக்கும். பெரிய பண்ணை குடும்பம் அவர்களுடையது. அந்த ஊரிலேயே பணம் மட்டும் அல்ல, பதவியிலும் உயர்ந்து நிற்கும் குடும்பம்.

 

தமிழரசியின் கணவன் காசி தான் அந்த ஊரின் எம்எல்ஏ. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த சொத்து அத்தனையும் தமிழரசியுடையது தான்.

 

அவர்களுக்காக கணக்கு எழுத வந்த காசியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அவரது இனத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழரசியின் பெற்றோர்களிடம் இருந்து பெரிதாக எந்த வித எதிர்ப்பும் வர வில்லை. அதுவும் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க ஒப்புக்கொண்டு இருந்தார்.

 

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு இதோ சான்றாக இரண்டு பிள்ளைகள். முதலில் மகன் வீர ராவணன். அவன் பிறந்து ஐந்து வருடத்திற்கு பிறகு அந்த வீட்டின் இளவரசி திவ்ய நிலா பிறந்து இருந்தாள்.

 

அவள் பிறந்ததில் இருந்து அவளை பார்த்து கொண்டது என்னவோ ராவணன் தான்.

 

திவ்ய நிலா அவனின் கைகளில் தவழ்ந்து திவ்யமாக வளர்ந்து வந்தாள். அன்னை கூட அவளை அதட்ட முடியாது. அப்படி பார்த்து கொண்டு இருந்தான்.

 

"அண்ணா" என்று மூன்று வயது நிலா ராவணனின் முதுகில் ஏறி கொண்டாள்.

 

எட்டு வயதில் அவன் பார்ப்பதற்கு பத்து பதினோரு வயது பாலகன் போல் தான் இருப்பான்.

 

வந்தவன், அவளுக்கு தேவையான உணவை கொடுத்து விட்டு, அவனுக்கும் சிற்றுண்டி உண்டு கொண்டு இருந்தான்.

 

அப்போது தான் உள்ளே வந்தார் தமிழரசி.

 

"என்ன ராவணா சாப்பிட்டியா?" என்று கேட்கவும், "சாப்பிட்டேன் அம்மா... நிலாக்கும் கொடுத்துட்டேன்" என்று பிள்ளை அவன் சொல்லவும், "சரி போ ஹாம்வர்க் செய்" என்றதும், "நிலா கூட கொஞ்சம் விளையாடிட்டு செய்றேன் மா" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு இருந்தான்.

 

அதற்கு மேல் தமிழரசியால் மறுக்க முடியவில்லை.

 

"சரி சரி கொஞ்சம் நேரம் விளையாடிட்டு நீ போய் படிக்கணும்" என்று அவனிடம் சொல்ல, அவனும் நிலாவுடன் விளையாட சென்று விட்டான்.

 

சிறிது நேரம் அவளுடன் விளையாடியவன், பின்பு சென்று படிக்க துவங்கி விட்டான். அப்போதும் அவனை விடாமல் வாலை போல் தொடர்ந்து கொண்டு சென்று அவனுடன் அமர்ந்து, அவனுக்கு எந்த வித தொல்லையும் கொடுக்காமல் அமர்ந்து கொண்டாள் நிலா.

 

அவளும் அவளுக்கு என்று வாங்கி கொடுக்கப்பட்ட புத்தங்கள் சிலவற்றை எடுத்து புரட்ட துவங்கினாள். மூன்று வயதில் என்ன மூதுரையா படிப்பாள்? நிறங்கள், பழங்கள் என்று அவளுக்கு என்ன தெரியுமோ தெரிந்தும் தெரியாமல் சிலவற்றை புரட்டி, பின்பு சிலவற்றிற்கு நிறங்கள் தீட்டி கொண்டு இருந்தாள்.

 

அவர்கள் இருவரும் அமர்ந்து இருக்கும் போதே அங்கே வந்தார் காசி. பிள்ளைகள் இருவரையும் பார்த்தவர், "என் பசங்க இரண்டுமே தங்கம் தான்" என்று சொல்லிக்கொண்டே மகனின் அருகே அமர்ந்தவர், மகளை அவரின் மடிக்கு கடத்தி இருந்தார்.

 

அவளும் வாகாக தந்தையின் மடியில் சாய்ந்து கொண்டு, "ப்பா இங்க பாருங்க" என்று அவளின் மழலை மொழியில் கூற, "பாரேன் என் தங்கம் கலர் பண்ணுறீங்களா? இது என்ன கலர்?" என்று கேட்டவருக்கு, "ரெட்" என்று சரியாக சொல்ல, அவளின் கன்னத்திலும் முத்தம் கொடுத்து இருந்தார்.

 

"போதும் போதும் உங்க பொண்ணை கொஞ்சுனது... அந்த டெண்டர் விஷயம் என்ன ஆச்சு?" என்று தமிழரசி கேட்கவும், "வெளிய தான் நான் எம்எல்ஏ... வீட்டுக்குள்ள உங்க அம்மா தான் சிஎம்" என்று சொல்லவும், ராவணன் சிரிக்க, புரிந்ததோ புரியமலையோ நிலாவும் அண்ணாவுடன் சேர்ந்து சிரித்தாள்.

 

"என்ன அங்க சிரிப்பு?" என்று கேட்டுக்கொண்டே அவர்களின் அருகே வர, "ஒன்னும் இல்ல அம்மா" என்று தலையாட்டி இருந்தான் ராவணன்.

 

பின்பு தமிழரசியுடன் அன்றைய வேலை பற்றி பேச அவர் நகர்ந்து விட்டார்.

 

எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது. இல்லை இல்லை, உண்மை தெரியாமல் சென்று கொண்டு இருந்தது.

 

உண்மையை பல நாட்கள் மறைத்து வைக்க முடியாதே!

 

தமிழரசியிடம் வேலை பார்க்கும் ஒருவர் தான் அவளிடம் ஒரு நாள் வந்தார்.

 

"சொல்லுங்க சுப்பையா என்னவோ சொல்லணும்னு சொன்னிங்க" என்றவரை தயக்கமாக பார்த்து கொண்டு இருந்தார் சுப்பையா. அவர்கள் குடும்பம் பரம்பரை பரம்பரையாக இந்த வீட்டில் உள்ள அணைத்து நிர்வாகங்களையும் மேல் பார்வை பார்த்து கொண்டு வந்து இருந்தனர்.

 

தமிழரசிக்கு பின் அந்த வீட்டின் சொத்தை பற்றி முழுதாக தெரிந்து இருக்கும் ஒரே நபர் சுப்பையா தான். காசிக்கு கூட பெரிதாக தெரியாது என்று கூறலாம்.

 

"அம்மா... அது..." என்று தயங்கி நிற்க, "என்ன சுப்பையா இவளோ ஏன் தயங்குறீங்க?" என்று அவர் மேலும் கேட்க, "அம்மா நம்ப ஐயாவை பத்தி அரசல் புரசலா..." என்று அவர் துவங்கும் போதே, "ஹான் நானும் கேள்வி பட்டேன் சுப்பையா.. அதெல்லாம் அரசியல் பண்றவங்க மேல வர புரளி தானே.. தட்டி விடுங்க" என்றவளை பார்த்து, "இல்ல மா நானே கண்ணால பார்த்தேன்" என்று எப்படியோ தைரியத்தை வரவழைத்து கொண்டு சொல்லி விட்டார்.

 

தமிழரசியின் கண்கள் இடுங்கியது. சுப்பையா பொய் சொல்ல மாட்டார் என்று தெரியும். ஆனாலும் இத்தனை பெரிய பழியா?

 

"நேத்து மதியம் ஐயா இரண்டு பொண்ணுங்களோட டவுன்ல இருக்க ஒரு லாட்ஜ்க்கு போறதை நானே என் கண்ணால பார்த்தேன் அம்மா" என்று அவர் சொல்லவும், அவருக்கு இன்னும் நம்புவதா வேண்டாவா என்கிற ஒரு கேள்வி.

 

"ஐயா ஒரு ஒரு வாரமும் அந்த லாட்ஜ்க்கு போறதா அங்க வேலை பாக்குறவன் சொன்னான் மா" என்றும் சொல்ல, "அடுத்த தடவ போகும் பொது சொல்லுங்க" என்றதுடன் முடித்து கொண்டார்.

 

அவருக்கு உலகமே தலைகீழாக இன்ற உணர்வு.

 

அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர், அவருக்கே துரோகம் செய்வாரா என்றும் கேள்வி எழுந்தது. செய்து விட்டால்? நெஞ்சம் நடுங்கியது. தைரியமான பெண் தான், ஆனாலும் கட்டியவன் அவளுக்கு உண்மையாக இல்லை என்பதை எந்த பெண்ணாலும் எளிதில் தாங்கி கொள்ள முடியாதே!

 

ஒரு வித நடுக்கம் அதையும் தாண்டி ஒரு பயம். சொத்து இருந்தது, படிப்பு அறிவும் இருக்கிறது ஆனால் இந்த ஊர் என்ன பேசும் என்கிற ஒரு வித பயம்.

 

உண்மை என்று தெரிந்து விட்டால் நிச்சயம் அவருடன் வாழ முடியாது. அப்படி ஒரு வாழ்க்கை சாக்கடை தானே!

 

ஆனாலும் அப்படி எல்லாம் இருக்க கூடாது என்று மனது கடவுளிடம் வேண்டி கொண்டே இருந்தது.

 

அன்றைய நாள் இரவு, காசி அவரை கூட நினைக்கும் பொது, "கொஞ்சம் உடம்பு சரி இல்லங்க" என்று சொன்னதும் தான் தாமதம், "உடம்புக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி உன் உடம்பை பார்த்துக்கவே மாட்டேங்குற? நாளைக்கு டாக்டர் கிட்ட போலாமா?" என்றெல்லாம் கேட்டு இருந்தார்.

 

இவ்வளவு அக்கறை உள்ளவரா என்னை ஏமாற்றுவார்? என்கிற கேள்வியும் அவரின் மனதில் எழாமல் இல்லை.

 

ஒரு வாரம் கடந்து இருந்தது.

 

"அம்மா ஐயா இங்க வந்து இருக்காராம்" என்று சுப்பையா சொல்லவும், அவரும் கிளம்பி அதே லாட்ஜிற்கு சென்றார்.

 

அந்த அறையை தட்டவும், "என்ன யா?" என்று மேற் சட்டையின்றி வெளியே வந்தது என்னவோ காசி தான்.

 

கூடவே இரண்டு பெண்கள்!

 

அவரின் கண்களும் விரிந்தன! அவரும் நினைத்து பார்க்கவில்லை, அவரது மனைவி இங்கு வந்து நிற்பாள் என்று... அவருக்கு தெரிய கூடாது என்பதற்காக தானே இப்படி அடுத்த ஊரில் இருக்கும் லாட்ஜில் வந்து கூத்தடிப்பது.

 

தமிழரசியின் கண்களில் அவ்வளவு ரௌத்திரம்!

 

"பெண்ணே ரௌத்திரம் பழகு" என்கிற கோட்பாடுடைய அவரால் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா?

 

"தமிழ் நாள் சொல்றதை..." என்று காசி பேசும் முன்னமே, அனைவரின் முன்னிலையிலும் செருப்பால் அடித்து இருந்தார்.

 

"உன்னை கையால இதோட நான் தொட மாட்டேன். அப்படி தொட்டா எனக்கு தான் அசிங்கம். மலத்தை கைல தொடர மாதிரி இருக்கும். சுப்பையா டிவோர்ஸ்க்கு அப்பளை பண்ணுங்க... இந்த ஆளோட எல்லா சாமான் சட்டை எல்லாத்தையும் வீட்ல இருந்து தூக்கி போடுங்க... பொறிக்கிட்டு போகட்டும்.. என்னால சாக்கடை கூட எல்லாம் குடும்பம் நடத்த முடியாது... அப்புறம் அந்த கல்வி அமைச்சர்க்கு போன் போடுங்க... அவரு கிட்ட பேசணும்.... இந்த ஆளோட சீட்டை கிழிக்க சொல்லணும்..." என்று சொல்லவும், காசி தமிழரசியின் காலிலேயே விழுந்து விட்டார். இந்த பதவி வந்த பிறகு தான் இந்த பழக்கம் எல்லாம் வந்தது.

 

ஆனால் இப்பொது பதவி, பணம் எல்லாம் பறித்து விட்டால், அவரின் மானமே போய் விடுமே!

 

"தமிழ் தெரியாம பண்ணிட்டேன்" என்று காலை பிடிக்க வந்தவரை, காலாலேயே உதைத்து தள்ளி நிறுத்தியவர், "சுப்பையா நான் சொன்னதை எல்லாம் செய்ங்க" என்று அங்கிருந்து விறுவிறுவென்று சென்று விட்டார்.

 

அங்கிருந்த பலருக்கும் தமிழரசியை தெரிந்து தான் இருந்தது.

 

"இந்த ஆளுக்கு என்ன கேடு வந்தது? இப்படி தங்கவிக்ரகம் மாதிரி பொண்டாட்டி வச்சிக்கிட்டு இன்னொருத்தியை தேடி போயிருக்கான்" என்று சிலர் பேச, "பொம்பளை கிட்ட அடி வாங்கிருக்கான் இவன் எல்லாம் ஆம்பளையா?" என்றும் சிலர் பேசினார்கள்.

 

காசிக்கோ இன்னும் தமிழரசியின் மேல் கோவம் எழுந்தது.

 

அவரை கொலை செய்ய வெறியே வந்தது.

 

சொல்லியது போல, அவர் வீட்டிற்கு செல்லும் நேரம், அவரின் அனைத்து உடமைகளும் வெளியே தூக்கி எரிய பட்டு இருந்தது.

 

அவர் உள்ளே செல்ல எத்தனிக்கும் சமயம், "உங்களை உள்ள விட கூடாதுன்னு சொல்லி இருக்காங்க" என்று அவரை அங்கேயே வேலை ஆட்கள் தடுத்து நிறுத்தி இருந்தார்கள்.

 

இதே சமயம் அங்கே வேலை செய்யும் பெண்கள் சிலர், "அம்மா யாரு தான் ஊர் உலகத்துல தப்பு பண்ணல... ஐயாவை மன்னிச்சு ஏத்துக்கலாமே" என்று ஒரு சில பெண்கள் சொல்ல, தமிழரசியோ, "சாக்கடையோட வாழ்ந்தா நம்ப வாழ்க்கையும் நாத்தம் தான் அடிக்கும்... என்னால வாழ்க்கை முழுக்க இப்படி வாழ முடியாது... அதுக்கு நான் தனியா என் பசங்களோட வாழ்ந்துட்டு போறேன்" என்று முடித்து கொண்டார்.

 

காசிக்கோ தமிழரசியை பழிவாங்கி விட வேண்டும் என்கிற வெறி. மொத்தமாக குடித்தவன், அவர்களின் வீட்டின் சுவரில் ஏறி குதித்து தமிழரசியின் அறையையும் அடைந்து இருந்தான்.

 

அங்கே அவருடன் தூங்கி கொண்டு இருந்தார்கள் ராவணனும், நிலாவும்....

 

கத்தியுடன் உள்ளே நுழைந்தான் காசி!

 

தமிழரசிக்கு தான் அன்று உறக்கமே வரவில்லையே, ஆனால் அதை அறியாதவன், அந்த அறையினுள் நுழைய, அவர் உறக்கத்தில் இருந்து விழித்து விட, கத்தியுடன் நின்று இருந்த காசியை கண்டவர், "டேய் நீ இங்க என்ன டா பண்ற?" என்று கேட்டுக்கொண்டே, அவர் ஆட்களை கூப்பிடும் முன்னே, அவரின் கையில் இருந்த கத்தியை வைத்து அவரை குத்த முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

 

அதே சமயம் பிள்ளைகள் இருவருக்கும் கூட அன்னையின் குரல் கேட்டுவிட்டது.

 

முழித்தும் கொண்டார்கள்.

 

ராவணன் கண்டது என்னவோ காசி தமிழரசியை கத்தியால் குத்த வரும் காட்சி தான்.

 

"அப்பா அம்மாவை விடு ப்பா" என்று பிள்ளை அவன் கத்த, அவன் கத்திய கத்தலில் வேலை ஆட்களும் வந்து விட்டார்கள்.

 

ஆனால் அங்கிருந்து தப்பிக்க வேண்டுமே என்று காசி கையில் ஏந்தியது என்னவோ நிலாவை தான்.

 

"டேய் குழந்தையை விடு டா" என்று தமிழரசி கத்த, அவனோ, "கிட்ட வந்தா என் குழந்தையை நானே கொன்னுடுவேன்" என்று அரக்கனாய் அவன் பேச, அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

 

அவனோ வீட்டின் மாடியில் வேறு, பால்கனிக்கு அருகே இருந்தான்.

 

"குழந்தையை கொடு" என்று மீண்டும் தமிழரசி கேட்கவும், அவனோ பின்னே சென்று கொண்டே இருந்தான்.

 

நிலா அழ ஆரம்பித்து இருந்தாள்.

 

"ஹே அழாத சனியனே" என்று அவன் கத்தவும், மேலும் அழுகை மேலிட, அவனுக்கோ போதையில் புதி மழுங்கி போய்விட்டது.

 

"என்ன எல்லாரு முன்னாடியும் செருப்பால அடிச்சல டி... அதுக்கு தண்டனை இது தான்" என்றவன் யோசிக்கவே இல்லை... ஏதோ குப்பையை தூக்கி எறிவது போல், மூன்று வயது குழந்தையை பால்கனியில் இருந்து தூக்கி எரிந்து இருந்தான்.

 

"நிலா" என்று தமிழரசியும் ராவணனும் இறங்கி ஓட, அங்கே இருந்தவர்கள் அவனை பிடித்து அடி வெளுக்க ஆரம்பித்து இருந்தனர்.

 

என்ன அடித்து என்ன பிரயோஜனம்? அந்த மழலை இந்த பூவுலகை விட்டு சென்று விட்டு இருந்தாள்.

 

அவன் தூக்கி எறிந்த இடத்தில ஒரு பெரிய கல் இருக்க, நிலாவின் தலை அதில் பட்டு செயல் இழந்து விட்டது.

 

நிலா பிரகாசமாகும் முன்னே, அவளின் ஒளி மொத்தமாக மறைந்து இருந்தது.

 

அவளை மடியில் ஏந்திய தமிழரசியின் கண்களில் அத்தனை கண்ணீர். அதே மடியில் தானே ஒன்பது மாதம் அவளை சுமந்தும் இருந்தார். தாய் நெஞ்சம் பதைத்தது.

 

வெகுண்டு எழுந்தவர் யோசிக்கவேயில்லை. ஒரே வெட்டில் காசியின் தலையை சீவி இருந்தார்.

 

யாரும் எதுவும் சொல்லவில்லை. ராவணன் கூட அப்படியே நின்று தான் இருந்தான். தங்கைக்காக வந்த கண்ணீர் தகப்பனுக்காக வர வில்லை.

 

அவன் தான் மனிதனே இல்லையே!

 

அவர்களின் வீட்டில் இருந்தவர்கள் கூட ஏதோ கட்சி பிரச்சனை என்று காவல்துறையில் எதுவும் தெரியாமல் பார்த்தும் கொண்டார்கள்.

 

அரக்கனை வதைத்ததற்கு தண்டனை எதற்கு? நரகாசுரன் இறந்தால் தீபாவளி தானே அவனை அழித்ததற்கு கிருஷ்ணனை சிறைக்கு அனுப்பவில்லையே என்கிற எண்ணம் தான்.

 

மகனுக்காகவே வாழ பழகி கொண்டார். அந்த நிகழ்விற்கு பிறகு அவரை ஊரே கையெடுத்து கும்பிட தான் ஆரம்பித்தது. அனைவருக்கும் தெரியும் அவர் தான் காசியை கொலை செய்தார் என்று, ஆனால் அதை கொலையாக யாரும் பார்க்கவில்லை. பார்க்கவும் தோன்றவில்லை. மார்பில் பாலுறும் எந்த தாய்க்கும் தமிழரசியின் வலி புரியும்.

 

ராவணனை தேற்ற தான் நாள் எடுத்தது. உடைந்து விட்டான். சிறு பாலகன் தானே அவனுக்கு சட்டென்று அனைத்தையும் ஏற்று கொள்ளும் பக்குவம் இல்லை.

 

"உன் தங்கச்சிக்கு நடந்த அநியாயத்துக்கு நான் நியாயம் வாங்கி கொடுத்துட்டேன். ஆனா இப்படி எத்தனையோ அநியாயங்கள் நடக்குது... அதுக்கு எல்லாம் நீ தான் நியாயம் வாங்கி கொடுக்கணும்... இப்படியே உட்கார்ந்து இருந்தா எதுவும் நடக்காது ராவணா... ராமன் வருவான் சீதையை காப்பாத்துவானு எல்லாம் நம்புறது முட்டாள் தானம்... வித்யாசமா நீ இரு... ராவணன் வருவான் எங்களை காப்பாத்துவானு மக்கள் உன்னை பார்த்து சொல்லணும்..." என்று மகனை தேற்றியது மட்டும் அல்லாமல், இதோ இன்று கண் முன்னே காவல்துறையிலும் சிறந்து விளங்க வைத்து விட்டாரே!

 

ஊரில் சிலர் எது பேசினாலும் காதில் வாங்காது மகனுக்காகவே வாழ்ந்து விட்டார்.

 

இதோ இப்பொது நினைத்து பார்த்தால், ஏதோ கனவு போல் தோன்றுகிறது. ஆனால் நடந்தது அனைத்தும் உண்மை தானே!

 

தமிழரசிக்கு தைரியம் இருந்தது, காரணம் அவருக்கு படிப்பு, பணம், அந்தஸ்து என்று அனைத்தும் இருந்தது. அவர் யாரிடமும் கை கட்டி நின்றது இல்லை. ஆனால் மாதவி அப்படி இல்லையே!

 

பார்த்ததும் கணித்து இருந்தார். அவளே குழந்தை போல் தான் இருந்தாள். அவளுக்கு ஒரு குழந்தை.

 

அவளின் கண்கள் சொன்ன கதைகள் ஆயிரம். இன்னும் சொல்லா கதைகள் எத்தனையோ?

 

நிலா அப்படியே ராவணனின் கைகளில் உறங்கி இருந்தாள்.

 

அன்னை வந்து நிற்பதை பார்த்தவன், "வாண்டு தூங்கிட்டா மா... நீங்க அவளை வீட்ல விட்டுடுறிங்களா?" என்று கேட்கவும், "அவளை உன் ரூம்ல படுக்க வேய்... உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று சொல்லவும், அவனும் தலையசைத்து நிலாவை படுக்கவைத்து விட்டு வந்தான் ராவணன்.

 

வந்ததும், தமிழரசி சொன்னதை கேட்டு அவனின் கண்கள் விரிந்தன.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 1

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 2