கண்கள் சொல்லும் கதைகள்! கதை 8

 

கண்கள் சொல்லும் கதைகள்!

கதை 8

 

மாதவியின் முன் அமர்ந்து இருந்தார் தமிழரசி.

 

ராவணனும் அங்கே தான் நின்று இருந்தான்.

 

"என்னனு சொல்லுமா? ஏதாவது சொன்னா தானே நாங்க ஏதாவது பண்ண முடியும்" என்று அவர் கேட்க, ராவணனோ அங்கே மாதவியை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

 

அவனது அன்னை தான், "நம்ப அந்த பொண்ணு மாதவி கிட்ட பேசணும் டா... அந்த பொண்ணு ஏதாவது கேஸ் கொடுத்தா நீ தான் எடுக்கணும்" என்று விரலை நீட்டி சொல்ல, அவனின் கண்கள் விரிந்தன.

 

"அம்மா... நடக்குறதா பேசுங்க... அந்த பொண்ணுக்கு பிரச்சனைன்னு எனக்கு என்னைக்கோ தெரியும். ஆனா அவ வாயே திறக்க மாட்டா... நானும் ஒரு நாள் கேட்டு பார்த்தேன். வேஸ்ட் ஆவ் டைம்" என்று சலிப்பாக சொல்லி இருந்தான்.

 

"டேய் அவளுக்காக இல்லனாலும் அந்த மூணு வயசு குழந்தைக்காக டா... அவளை நினைச்சி பாரு" என்று சொல்லவும், மூச்சை இழுத்து விட்டவன், "சரி வாங்க போய் பேசுவோம்... எப்படியா இருந்தாலும் அவ வாய திறக்க மாட்டா.. உங்க ஆசைய எதுக்கு கெடுக்கணும்" என்று சொன்னவன், அவருடன் மாதவியின் வீட்டிற்கு சென்று இருந்தார்.

 

இதோ இப்பொது அமர்ந்தும் இருந்தார்கள்.

 

"தைரியமா சொல்லுமா" என்று மாதவியை மேலும் பேச வைக்க முயற்சித்தார்.

 

ராவணனுக்கோ கடுப்பாக இருந்தது.

 

"அம்மா நான் தான் சொன்னேன்ல அவ சொல்ல மாட்டா" என்று சொல்லி அவன் நகர முற்பட, "சொல்றேன் சார்" என்றவள் அனைத்தையும் சொல்லி முடித்தாள். அவனின் பால் இருந்த ஈர்ப்பை தவிர! அதை இப்பொது சொல்லியும் எந்த வித பிரயோஜனமும் இல்லையே என்கிற எண்ணம் தான் அவளுக்கு!

 

"என்ன இவளோ கேவலமாவா நடந்து இருக்கான்? நீ என்ன மா சும்மா இருக்க? கல்யாணம் ஆன முதல் நாளே நீ போய் போலீஸ் ஸ்டேஷன்ல மேரிடெல் ரேப் கம்பளைண்ட் கொடுத்து இருக்க வேண்டாம். இப்படியே அவன் பண்ற அநியாயத்தை எல்லாம் நீ பொறுத்துகிட்டு இருக்கணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா?" என்று தமிழரசி கத்தியே விட்டார்.

 

அவருக்கு நடந்த கொடுமை கூட இப்பொது அவருக்கு பெரிதாக தெரியவில்லை. அவளுக்கு நடந்தது மனது பதைத்தது. கணவன் செய்த துரோகம் மட்டும் தான் அவருக்கு, ஆனால் மாதவியோ வாழ்க்கையில் மகிழ்ச்சி என்கிற ஒன்றையே பார்க்காமல் இருக்கிறாளே!

 

கலவி மட்டுமே திருமணம் அல்ல, ஆனால் அந்த பேதைக்கு காதல் தான் கிடைக்கவில்லை ஆனால் கலவியில் கூட துளி காதல் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறாள்.

 

ஒரு பெண்ணாக அவரது நெஞ்சத்தில் தீ பிழம்பே எரிந்தது. இப்பொது மட்டும் குணவாளன் இங்கே இருந்து இருக்க வேண்டும், கொன்றே போட்டு இருப்பார்.

 

மாதவியின் இதழ்களில் ஒரு வலி நிறைந்த புன்னகை.

 

"அப்போனா கல்யாணம் ஆன முக்கால் வாசி பெண்கள் போலீஸ் ஸ்டேஷன்ல தான் அம்மா இருக்கனும்... நம்ப நாட்ல தான் கல்யாணம் ஆகிட்டா எல்லாமே லீகல் ஆச்சே அம்மா.. எத்தனை புருஷன் கல்யாணத்துக்கு பிறகு முதல் இரவுல உனக்கு இது ஓகேவான்னு கேட்குறான்? அது கூட தேவை இல்ல, வலிக்குதான்னு கேட்குற அளவுக்கு கூட ஆண்கள் பலருக்கு இங்க மனது இல்லையே... என் வாழ்க்கை இப்படி தான்.. ஆனா இன்னைக்கு வரைக்கும் என் பொண்ணுக்கு கொஞ்சமாச்சு பாதுகாப்பு வேணும்னு தான் இங்க இருந்தேன் ஆனா இப்போ அதுக்கும் ஆபத்து வருது... ஏதாச்சு எனக்கு உதவி செயிரிங்களா?" என்று அவரின் கையை பிடித்து கொண்டு கெஞ்சினாள்.

 

தாய் மனம் அவளுக்காக துடிக்கவில்லை ஆனால் குழந்தைக்காக பதறுகிறது. ஒரு தாயாக தமிழரசிக்கும் அவளின் மனம் புரிந்தது.

 

தமிழரசியோ இப்பொது ராவணனை பார்த்து, "டேய்! நீ ஏதாவது பண்ணு டா" என்று சொல்லவும், "நான் என்ன பண்ண முடியும்?" என்று அவன் அசட்டையாக தான் பேசினான்.

 

மாதவியின் கண்கள் விரிந்தன.

 

"அம்மா... மூணு வயசு பிள்ளையை வேணா நான் காப்பாத்த முடியும். ஏனா அந்த பிள்ளைக்கு எது நல்லது கெட்டது தெரியாது... அவளால அவளுக்காக போராட முடியாது. ஆனா மாதவிக்கு அப்படி இல்ல... அவ ஒரு மேஜர்... அதையும் தாண்டி இருபத்தி ஒரு வயசு பொண்ணு... மூணு வயசு குழந்தைக்கு அம்மா... அவ வாழ்க்கைக்கு அவ தான் போராடனும்... நான் இல்ல... இது ஒன்னும் கதை இல்ல... ஹீரோயின் அழுததும் போலீஸ் ஹீரோ வந்து காப்பாத்தி கூட்டிட்டு போய் சுபம் போட... இது வாழ்க்கை... அவங்க தான் அவங்க வாழ்க்கைக்காக போராடனும்... அவங்களுக்கு அவங்க வாழ்க்கை மாறனும்னா அவங்க தான் மாறனும் அதே மாதிரி அவங்க தான் அவங்களோட வாழ்க்கையை மாத்தணும்... அதுக்கான முதல் படி அவ தான் அவளோட சோ கால்டு புருஷனுக்கு எதிரா கம்பளைண்ட் கொடுக்கணும்" என்று சொன்னவன் விழிகள் இப்பொது மாதவியில் படிந்தது.

 

கண்களில் இருந்த கண்ணீரை துடைத்தவள், "நான் கம்பளைண்ட் கொடுக்குறேன் சார்" என்று உறுதியாக சொல்லி இருந்தாள்.

 

இதை அவள் எப்போதோ செய்து இருக்க முடியும் தான், ஆனால் அவளுக்காக அதை செய்ய வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. அவளின் மகளுக்காக தான் தோன்றியது. பல பெண்கள் அப்படி தான்,அவர்களுக்காக என்று வரும் பொழுது எதுவும் பேச மாட்டார்கள், அவர்களின் உதிரத்தில் உதித்தவர்களுக்காக உலகையே எதிர்த்து நிற்பார்கள். மாதவியும் அவ்வகை போல!

 

ராவணன் இதழ்களில் மெல்லிய புன்னகை.

 

"குட்! நாளைக்கு வந்து கம்பளைண்ட் கொடு" என்று சொல்லவும், அவளும் தலையசைத்து கொண்டாள்.

 

"போகலாம் மா" என்றவனிடம்,  "இரு டா" என்றவர் மாதவியை பார்த்து, "இங்க பாரு மா இன்னைக்கு இருக்கிற இதே மன தைரியம் நாளைக்கும் இருக்கனும்.. உன்னை மாதிரி இருக்கிற பொண்ணு கிட்ட இருக்கிற பெரிய பிரச்சனை என்னனா இன்னைக்கு கம்பளைண்ட் கொடுப்பேன்னு சொல்லிட்டு நாளைக்கு கொடுக்க மாட்டேன்னு மனசு மாறிடுவ..." என்றதும், அவளோ அழுத்தமாக இல்லை என்று தலையசைத்து, "இது எனக்காக எடுக்குற முடிவுனா மாறி இருப்பேன்.. என் பெண்ணுக்காக எடுக்குற முடிவு மாறவே மாறாது" என்கிறவளின் பதிலில் உறுதியும் இருந்தது.

 

அவளின் கன்னத்தை தட்டியவர், "நிலா தூங்கிட்டு இருக்கா முழிச்சதும் அனுப்பி விடுறேன்" என்று சொல்ல, "ரொம்ப நன்றி ம்மா" என்றவளின் கண்களில் விழுந்த கண்ணீர் அவரின் கைகளை நனைத்தது.

 

அந்த கண்ணீரில் நன்றி உணர்வு தான் நிரம்பி இருந்தது.

 

"அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல" என்றவர் ராவணனுடன் சென்று விட்டார்.

 

அவர்கள் சென்ற பின்பு இத்தனை நாள் இல்லாத நிம்மதி இப்பொது இருப்பது போல் தோன்றியது. இதை முன்னவே செய்து இருக்கலாம் என்றும் அவளின் மனது அவளை சாடியது.

 

ஆனால் நிம்மதியை பறிக்கவே வந்து இருந்தான் குணவாளன். அதுவும் அவனுடன் மாதவியும் அவளது கணவன் பாஸ்கரனும் வந்து இருந்தார்கள்.

 

அவர்கள் வந்ததை பார்த்ததும் உடனே எழுந்தவள், "எதுக்கு இப்போ வந்து இருக்கீங்க?" என்று கேட்டுக்கொண்டே அவர்களை நெருங்கும் முன், "டேய் உன் பொண்டாட்டி செம்மயா இருக்கா டா" என்று லஜ்ஜையே இன்றி கூறி இருந்தான் பாஸ்கர்.

 

குணாளனை விடவும் காமக்கொடூரன் அவன்! பொண்டாட்டி மற்றோருவனுடன் உடல் உறவு கொண்டது அவனுக்கு பெரிதாக பட வில்லை. அவன் பொண்டாட்டியை கொடுத்து அடுத்தவனின் பொண்டாட்டியை பெற்று கொள்ளும் ஒரு ஈனப்பிறவி. இதையே கணவனும் மனைவியும் பொழுதுபோக்காக செய்து கொண்டு இருகினறனர். ஒரே ஆளுடன் வாழ்க்கை நடத்துவது சலித்து விடுமாம். இப்படி வாழ்வது தான் நல்ல வாழ்க்கை என்று நினைத்து கொண்டு இருக்கும் இது போன்ற பிறவிகளை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று இவர்களை படைத்த இறைவனுக்கு தான் வெளிச்சம்.

 

"இவன் பொண்டாட்டியோட நான் இருந்ததை அவன் பார்த்துட்டான். அதுக்கு பதில் அவனோட நீ இருப்பியாம்" என்று லஜ்ஜையே இன்றி பேசி இருந்தான்.

 

அவளுக்கு கோவம் அடுத்த கட்டத்தை எட்டியது.

 

அவனின் முகத்திலேயே காரி உமிழ்ந்து இருந்தாள். எப்போதோ செய்து இருக்க வேண்டும் இப்பொது செய்கிறாள். அவளுக்கென்று யாருமே இல்லை என்கிற எண்ணம் இப்பொது இல்லையே! நான் உனக்காக இருக்கிறேன் என்று இன்று தமிழரசி சொல்லியது போல் யாரவது அவளுக்கு சொல்லி இருந்தால், நிச்சயம் என்றைக்கோ இந்த குணவாளனை கும்மி எடுத்து இருப்பாள்.

 

ராவணன் கூட அன்று ஏதாவது பிரச்சனை என்றால் சொல் என்று சொல்லினானே தவிர, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லவில்லை. தமிழரசி சொல்லவில்லை செய்தே காட்டினார். யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிற்கு அவரே வந்து சமைத்து, மாத்திரை போட வைத்து அவளுக்கு இருக்கின்ற பயம் என்னும் நோயையும் போக்கி இருந்தார்.

 

எல்லா பெண்களிலும் சக்தி இருக்கிறாள். கொற்றவை இருக்கிறாள். துர்கை இருக்கிறாள். அவளுக்கு சூலமாக யாரும் இருக்க விரும்புவதில்லை. "நான் இருக்கிறேன்" என்று மட்டும் பெண்களிடம் சொல்லி பாருங்கள், எத்தனை கொற்றவைகள் வெளியே வருவார்கள் என்று அன்று தான் தெரியும்.

 

மாதவியும் முழித்து விட்டாள். இன்று அவளின் நாள்! அடுத்த நாள் புது ஆண்டு பிறக்கவிருந்தது... இதோ இன்றுடன் அவளின் பழைய அவதாரமும் முடிந்து இருந்தது. புத்தாண்டில் புது பிறவி எடுத்து விட்டாள் போல!

 

அவளின் தலையின் முடியை பிடித்து இருந்தான் குணவாளன். வலி உயிர் போனது. அப்போதும் அவள் அழவில்லை.

 

"ஹே! இத்தனை நாள் உனக்கு சோறு போட்டதுக்கு நான் சொன்னதை எல்லாம் நீ செய்யணும்... உன்னால எனக்கு தான் ஒழுங்கா சுகத்தை கொடுக்க முடியல... இவனுக்காச்சு கொடு... அவன் தான் உன்னை ராணி மாதிரி வச்சிக்குறேன்னு சொல்றான்ல" என்று கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் பேசி இருந்தான்.

 

இத்தனை நாட்கள் அவன் தான் வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டு இருந்தான். இப்பொது அவளையும் மற்றோருவருடன் உறவு கொள்ள சொல்கிறான். கணவன் என்று காவலனாக இருக்க வேண்டும் ஆனால் இங்கோ அவனே கயவனாக மட்டும் அன்றி இரக்கமே இல்லாத வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு ஈன பிறவியாக இருக்கிறான்.

 

"முடியவே முடியாது" என்று அப்போது அவள் பற்களை கடித்து கொண்டு கூறவும், "அம்மா" என்று அப்போது தான் உள்ளே வந்தாள் இளநிலா. அப்போது தான் விழித்து இருந்தாள். ராவணன் வீட்டில் இருந்து நேரே அன்னையை காண வந்து இருந்தாள்.

 

அங்கே நின்று இருந்த த்ரிஷாவின் கணவன் பாஸ்கரின் கண்கள் இப்பொது மாதவியின் இருந்து இளநிலாவில் படிந்தது. மூன்று வயது குழந்தையாக பார்க்காமல் அந்த பிஞ்சையும் காமத்தால் பார்த்து கொண்டு இருந்தான் அந்த அரக்கன்.

 

அவனின் பார்வையின் வித்யாசத்தை உணர்ந்த மாதவிக்கு தூக்கி வாரி போட்டது. மூன்றே வயது குழந்தை அவளை போய் இப்படி காமத்துடன் பார்கிறானே!

 

"டேய் பொறுக்கி! இப்படி குழந்தையை கூட உன் உடம்பு சுகத்துக்கு பார்க்குறியே நீ எல்லாம் என்ன ஜென்மம் டா" என்றவள், குணவாளனின் கைகளில் இருந்து திமிறிக்கொண்டு, "நிலா ராவணன் அங்கிள் வீட்டுக்கு ஓடிடு மா" என்று கத்தவும், குழந்தை இரண்டடி எடுத்து வைக்கும் முன்பே, அவளை பிடித்து விட்டு இருந்தான் பாஸ்கரன்.

 

குழந்தை மாற்றான் கைகளில் சென்றதும் அழ துவங்கி விட்டாள்.

 

"குழந்தையை விடு டா" என்று மாதவி கத்திய கத்தல் நான்கு ஊருக்கு கேட்டு இருக்கும். ராவணன் தமிழரசிக்கு கேட்காமல் இருக்குமா?

 

தமிழரசி துடித்து வெளியே வர, ராவணனோ அவரின் கையை பிடித்து இருந்தான்.

 

"டேய் அந்த பொண்ணு கத்துறா டா.. அந்த சண்டாளன் வந்துட்டான் போல" என்று அவர் சொல்லவும், "வந்தது மட்டும் இல்ல... சொந்த பொண்டாட்டிய இன்னொருத்தனுக்கு தாரைவார்த்து கொடுக்கவும் போறான்... அது மட்டும் இல்ல... நிலா" என்றவனுக்கு அதற்கு மேல் பேச கூட முடியவில்லை. கைகள் இறுகின!

 

தமிழரசிக்கு மனதே வெடித்து விட்டது. "நான் போறேன் டா.. நீ இப்படியே இரு" என்று அவர் செல்ல போக, "அம்மா.. நான் நிலா கழுத்துல ஒரு ஹிடேன் கேமரா மாட்டி விட்டு இருக்கேன். நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க... இது மாதவியோட போராட்டம்... காதலிச்சு கல்யாணம் பண்ண நீங்களே உங்க பொண்ணை ஒருத்தன் கொன்னதுக்கு அவனை கொன்னு போட்டு இருக்கீங்க.. மாதவிக்கு பிடிக்காத கணவன்... அதுவும் அவளோட பொண்ணை ஒருத்தன் இப்படி தொட்டா அவளுக்குள்ளே இருக்க தைரியம் வெளிய வரும்... உங்களுக்கு முன்னவே தைரியம் இருந்தது. ஆனா மாதவி இனி இந்த வாழ்க்கையை வெளியே வந்து வாழணும்னா அவளுக்கு எவளோ தைரியம் வேணும்... அம்மா ஒரு நிலாவை இழந்துட்டேன்.. இந்த நிலாவை இழக்க மாட்டேன். என்னை நம்புங்க" என்று அழுத்தம் கொடுத்து பிடித்து இருந்தான்.

 

குழந்தையின் ஆடையில் பாஸ்கரன் கை வைக்க சென்று இருந்தான்.

 

அவ்வளவு தான் அவனுக்கு தெரியும். மாதவி யோசிக்கவே இல்லை. எங்கிருந்து தான் அவளுக்கு இத்தனை சக்தி வந்ததோ, குணவாளனை தள்ளி விட்டவள், அருகில் இருந்த பீங்கான் பூஞ்சாடியை எடுத்து பாஸ்கரனின் தலையில் ஓங்கி அடித்து இருந்தாள். அவனின் தலையில் இருந்து இரத்தம் சொட்டியது. அவனின் இரத்தம் மாதவியின் முகத்திலும் தெளித்து இருந்தது.

 

உடனே குழந்தையை அவனின் கையில் இருந்து பிடுங்கியவள், அருகில் இருந்த கத்தியை எடுத்து, "யாரவது என் குழந்தை பக்கத்துல வந்தீங்க... இன்னைக்கு உங்க மூணு பேருக்கும் பாடை கட்டிருவேன்" என்றவள் கர்ஜனையை அங்கே பக்கத்தில் இருந்தவர்கள் கூட வந்துவிட்டார்கள்.

 

மாதவி அல்ல அவள்! மாகாளியாய் தெரிந்தாள்!

 

கையில் சூலம் இல்லை கத்தி இருந்தது! அவளின் கார்கூந்தல் களைந்து, ரௌத்திரம் கண்களில் நிறைந்து, பிள்ளையை காக்கும் பொருட்டு அவதாரம் எடுத்து இருந்தாள்.

 

அவளை கொடுமை படுத்தும் பொது அவள் வெகுண்டு எழவில்லை. ஆனால் அவள் ஈன்றவளை ஒருவன் தொடும் பொழுது அக்னி பிழம்பாய் கொதித்து விட்டாள்.

 

"வாங்க போலாம்" என்று தமிழரசியுடன் ராவணன் அவர்கள் வீட்டை அடைய, திரிஷாவுக்கும் குணவாளனுக்கும் அல்லு விட்டது.

 

"என்ன நடக்குது இங்க?" என்று கம்பீரம் குறையாமல் ராவணன் கேட்கவும், "சார் என் பொண்டாட்டிக்கும் இவனுக்கும் கள்ள தொடர்பு சார்... நான் அதை கண்டு பிடிச்சதும் என்னை கொலை பண்ண ட்ரை பண்ரா சார்" என்று குணவாளன் அளந்து விட, ராவணனோ, "ஆஹான்" என்று கேட்டவன், குணவாளனின் செவிப்பறையை கிழித்து இருந்தான்.

 

கண்களில் வெறும் கண்ணீர் சுமந்து கொண்டிருந்தவளின் வாழ்வில் இனி வசந்தம் வீசுமா?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 1

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 2