கண்கள் சொல்லும் கதைகள்! கதை 28

 

கண்கள் சொல்லும் கதைகள்!

கதை 28

 

பேராசியர் இங்கு வருவார் என்று மாதவியும் எதிர் பார்க்கவில்லை.

 

"சார் நீங்க இங்க?" என்று மாதவி தயங்கி நிற்கும் போதே, "உன்னோட அம்மா இல்லையாமா?" என்று கேட்கும் போதே அங்கே தமிழரசியும் கனகாவும் வந்தார்கள்.

 

"இவரு?" என்று கனகா கேட்டு முடிக்கும் முதல், "என்னோட ப்ரொபஸர் அம்மா" என்று இருந்தாள்.

 

"வாங்க சார்... காபி டீ?" என்று கேட்கவும், "இல்ல இல்ல எனக்கு ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் வந்தேன். மாதவியை பத்தி எனக்கு எல்லாமே தெரியும். என் மகனுக்கு உங்க பொண்ணை கொடுப்பீங்களானு கேட்க தான் வந்தேன். நீங்க சரின்னு சொன்னா நான் காபி என்ன விருந்தே சாப்பிட்டுட்டு போறேன்" என்று வந்த விடயத்தை போட்டு உடைத்து இருந்தார்.

 

தமிழரசியின் கண்கள் மட்டும் அல்ல கனகாவின் கண்களும் விரிந்தன. மாதவிக்கோ அப்பட்டமான அதிர்ச்சி.

 

"அவளுக்கு வெறும் இருபத்தி நாலு வயசு தான் ஆகுது வாழ வேண்டிய பொண்ணு.. நல்ல பொண்ணும் கூட... என் மகன் உங்க பொண்ணை நிலாவோட கடை வீதில பார்த்து இருக்கான். அவனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு... எனக்கு மனைவியும் இல்ல... நானும் என் மகனும் பிற்போக்குவாதிகளும் இல்ல... எனக்கும் நிலாவை தெரியும். மாதவியோட பார்த்து இருக்கேன். நிலாவோட மாதவியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம். நீங்க சரின்னு சொன்னா மட்டும்" என்று அவர் சொல்ல, "அவ இப்போ தான் படிச்சுக்கிட்டு இருக்கா" என்றார் கனகா.

 

அவர் இல்லை என்று மறுக்கவெல்லாம் இல்லை. நிச்சயம் அவரே மாதவிக்கு மற்றோரு வாழ்க்கை வேண்டும் என்று தான் நினைத்து இருந்தார். ஆனால் அவள் சொந்த காலில் நின்ற பிறகு பார்க்கலாம் என்று நினைத்து இருந்தார்.

 

"ஏன் மா நானே அவ கல்லூரியில தான் வாத்தியாரா இருக்கேன்... படிப்பு முடிச்சு கல்யாணம்னாலும் சரி தான் இல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டும் அவ படிக்கட்டும்" என்று சொல்லி இருந்தார்.

 

கனகா மாதவியை பார்க்க, பின்பு அவரே, "நாங்க யோசிச்சி சொல்றோம் சார்" என்று சொல்லிவிட்டு இருந்தார்.

 

தமிழரசி எதுவும் பேசவில்லை. ஆனால் நிலா அவரை விட்டு சென்று விடுவாளோ என்கிற கவலை அவரினுள் எழுந்தது. மாதவியும் தான்! இன்று வரை இந்த வீட்டில் கேட்ட மழலை குரல் இனி ஒலிக்காதா என்று நினைக்கும் போதே அவருக்கு தொண்டை அடைத்தது தான்.

 

பெற்ற மகளை பறிகொடுத்தவருக்கு இந்த மூன்று ஆண்டுகளாக மாதவி மற்றும் நிலாவின் மூலம் பெரும் ஆறுதல் கிடைத்து இருந்தது. இப்பொது அதுவும் பறி போய் விடும் ஆபாயமோ?

 

இது எதுவும் தெரியாமல் வெளியே விளையாடி கொண்டு இருந்தாள் நிலா.

 

அதே சமயம் ராவணனும் அவனின் வேலை முடித்து ஜீப்பில் வந்து இறங்கினான்.

 

"வாண்டு" என்று அவன் சஙக்ளஸை கழட்டி விட்டு இளநிலாவை பார்க்க, அவளோ வீட்டை தாண்டி அவனின் அருகே வந்து நின்று இருந்தாள்.

 

வந்ததும் அவனை தூக்கும் மாறு கைகளை விரிக்க, ஒரு கையில் கைப்பையை வைத்து இருந்தவன், மற்றோரு கையால் அவளை தூக்கி இருந்தான்.

 

"இந்தா உனக்கு தான்" என்று அவளின் குட்டி கைகளில் அவள் தூக்கும் அளவு கணம் உள்ள பையை கொடுக்க, அவளோ அதை பிரித்து பார்த்தவுடன் அவளின் கண்கள் ஆசையில் விரிந்தது.

 

"எனக்கா?" என்று அவளின் மழலை குரலில் கேட்கவும், "உனக்கு தான் வாண்டு" என்று அவன் நெற்றியோடு நெற்றி முட்டி இருந்தான்.

 

இருவரின் கண்களும் அன்பு கதைகள் ஆயிரம் பேசின!

 

தந்தையிடம் காணாத அன்பை காவலனிடம் பெற்று இருந்தாள் நிலா மகள். அவளுக்கு குணவாளனின் நினைவுகள் கூட இல்லை. நினைவுகளை ராவணன் வர விடவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

அப்பா என்று ஒருவர் இருந்தார். அவர் இப்பொது இல்லை. நிலாவிற்கு எல்லாமே ராவணன் மட்டும் தான். அவனுக்கு அடுத்து ஆருத்ரனும் வேலவனும் இருந்தார்கள்.

 

அவள் கேட்கும் முன்பே அவளின் முன் அனைத்தையும் நீட்டும் நபர்கள் இருக்கும் போது, அவளை கொஞ்சம் கூட அன்பு செய்யாத முகத்தை கூட அந்த பிஞ்சு நினைவு வைத்து கொள்ளவில்லை.

 

நிலாவை தூக்கி கொண்டு உள்ளே வந்தான் ராவணன்.

 

மூன்று பெண்களும் அப்படியே நின்று இருந்தார்கள்.

 

"அம்மா ஹல்க் எனக்கு இதெல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கார் பாரேன்" என்று அவளின் அன்னையின் அருகே ஓடிச்சென்று அவள் சொல்ல, மாதவியோ அசையவே இல்லை.

 

மூவரின் முகத்தையும் கூர்ந்து பார்த்தவனுக்கு ஏதோ சரி இல்லை போல் தோன்றவும், "என்ன ஆச்சு?" என்று கேட்டே விட்டான்.

 

மாதவியோ, "இதெல்லாம் போய் ரூம்ல வை" என்று நிலாவை அனுப்பி வைத்து விட்டாள்.

 

பின்பு தமிழரசி தான் ஆரம்பித்தார்.

 

"மாதவியை பொண்ணு கேட்டு ஒருத்தர் வந்தார் டா" என்றதும் ராவணனின் கண்கள் விரிந்து சுருங்கியது.

 

"ஓஹ்" என்று மட்டும் சொன்னவன், மாதவியை பார்த்து, "உனக்கு இஷ்டமா மாதவி?" என்று நேரடியாக கேட்க, அவளோ அவனை பார்த்து, "இல்ல இப்போ கல்யாணம் வேணாம்" என்று சொல்லி இருந்தாள்.

 

"அப்புறம் என்ன அதான் அவளுக்கு வேணாம்னு சொல்லிட்டா இல்ல.. இதோட விடுங்க" என்று சொன்னவன் செல்ல போக, "ஆனா அவளுக்கு எப்படியா இருந்தாலும் இன்னொரு கல்யாணம் பண்ணியாகணும்னு தான் நான் நினைக்கிறன் தம்பி... நிலா கூட ஒருத்தன் அவளை ஏத்திகிட்டா நானும் நிம்மதியா இருக்கலாம்" என்று சொல்லி இருந்தார் கனகா.

 

அவனுக்குள்ளும் கொஞ்ச நாட்களாக இந்த நினைவு வந்து கொண்டு தான் இருக்கிறது. மாதவிக்கு நிச்சயம் இன்னொரு கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஆருத்ரன் கூட சொல்லி இருந்தான். ஆனால் நிலாவும் அல்லவா அவளுடன் சென்று விடுவாள். அவனால் நிலா இல்லாமல் இருக்க முடியுமா? என்கிற கேள்விக்கு இப்பொது அவனிடமே பதில் இல்லை.

 

அவனின் வாழ்வில் ஒரு அங்கமாக ஆகி இருக்கிறாள். அங்கமா அவள் தான் வாழ்வே என்று இப்பொது நிலை மாறி இருக்கிறது. பெற்ற அன்னை கூட சொந்த ஊருக்கு மாற்று வாங்கி வா என்று சொல்லியும் வராதவன், அந்த மழலையின் ஒரு சொல்லுக்கு கட்டு பட்டு இங்கே வந்து இருக்கிறான்.

 

அவன் உயிரணுவில் உருவாகவில்லை என்றாலும், அவனின் உயிரானவள் அவள் தான். என்றுமே எப்போதுமே, அவனின் கண்ணின் கண்மணி அவள். அவளை விட்டு அவனால் இருக்க முடியுமா? நினைக்கும் போதே நெஞ்சு அடித்து, முடியவே முடியாது என்று சொல்லி இருந்தது.

 

ஆனால் பெற்றவள் யாரோ அவளின் பின்னால் தானே நிலாவும் செல்ல வேண்டும்.

 

இன்று வரை தோணாத எண்ணம் இப்பொது கனகா சொல்லவும் தோன்றியது.

 

மாதவியை அவன் திருமணம் செய்தால்? மாதவியின் முகத்தை தான் பார்த்தான். இன்று வரை அவளை தவறாக அவன் பார்த்ததில்லை. ஆனால் இன்று முதல் முறை நிலாவிற்காக அவனின் நிலாவிற்காக அவளை உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தான்.

 

கலையான முகம், அழகாக இருந்தாள். இதெல்லாம் அவனுக்கு முன்னமே தெரியும். ஆனால் மற்றோன்று தான் அவனை ஈர்த்தது. அவனின் தாயை போல இதோ நரகத்தில் இருந்து விடுபட்டு நரகாசுரனை போன்ற குணவாளனை தூக்கு மேடையிலும் ஏற்றி விட்டு இருக்கிறாளே! அவளின் தைரியம் எத்தனை பெண்களுக்கு வரும்?

 

இப்படி ஒருத்தி அவனின் வாழ்வில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தான் அவனது எண்ணமும்!

 

அவனின் தாயை போல பெண் வேண்டும் என்று தான் இன்று வரை சொல்லி இருந்தான். அவனுக்கே தாயாக மாதவி உறுதியால் முடியும் என்று இன்று அவனுக்கு தோன்றியது.

 

"தம்பி உங்கிட்ட தான் பா கனகா சொல்றா" என்கிற தமிழரசியின் குரலில் சுயத்திற்கு வந்தவன், "அம்மா அவ படிக்கட்டும்... நம்ப நல்ல மாப்பிள்ளை வந்தா பாப்போம்" என்றதுடன் முடித்து கொண்டான்.

 

சொல்லிவிட்டு அவனின் அறைக்கு செல்பவன் மாதவியை ஒரு பார்வை பார்த்து விட்டு தான் சென்று இருந்தான்.

 

மாதவிக்கு இன்னும் நெஞ்சு கனத்து போனது. பின்னே அவன் நிலாவிற்காக இங்கு மாற்றல் வாங்கி வந்து விட்டு இருந்தான் என்று சொன்னதும் அவளது பதின் வயது காதல் மீண்டும் எட்டி பார்க்க துவங்கி இருந்ததே!

 

அவனது வீட்டில் மூன்று வருடங்களாக அவனை பற்றிய எந்த நினைவுகளும் இல்லை. அவளுக்கு குணவாளன் கொடுத்த வடுகளை மறந்து வாழவே நேரம் சரியாக இருந்தது.

 

இப்பொது தான் ஒரு மாதத்திற்கு முன் நிலாவை தூக்கி, "உனக்காக தான் டா நான் ட்ரான்ஸ்பெர் வாங்கிட்டு வந்துட்டேன்" என்று சொல்லவும், அவளின் கண்கள் விரிந்தன. எத்தனையோ முறை தமிழரசி அவளிடம் புலம்பி உள்ளார்.

 

"அந்த பையன் இங்க வரவே மாட்டேங்குறான் மா... ஏதோ நிலா வந்த பிறகு வந்து அவளை மட்டும் பார்த்துட்டு போறான்" என்று சொல்லி இருந்தார். ஆனால் அவளின் மகள் சொன்ன ஒரு வார்த்தைக்காக இதோ வந்து விட்டானே!

 

அத்தனை பிரியமா என் மகளின் மேல்! இப்படி ஒரு தந்தை என் பிள்ளைக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று அப்போதும் ஒரு தாயாக தான் அவளுக்கு மனது துடித்தது.

 

ஆனால் அவனுக்கு முதல் திருமணமே ஆக வில்லை. அவனை எப்படி? என்றெல்லாம் சொன்ன மனதை, "அவன் அப்படி எல்லாம் நினைக்க மாட்டான்" என்று அவளே அவளின் மனதின் ஆழ் ஆசையை ஊக்கு வித்து இருந்தாள்.

 

அவனை இப்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் ரசிக்கவும் ஆர்மபித்து இருந்தாள்.

 

அவள் இப்பொது குணவாளனின் மனைவி இல்லை. ஆனாலும் இது தவறு என்று சில நேரம் மனது சொல்லும், ஆனால் அவளின் மகளை தூக்கி கொஞ்சும் போது அவனின் பால் செல்லும் மனதை இழுத்து பிடித்து வைப்பது அவளுக்கு கடினமாக இருந்தது.

 

அவளின் மகளை அவனை தவிர வேறு ஒருவனால் அவனுக்கு நிகராக பார்த்து கொள்ள முடியுமா என்ன?

 

தெரியவில்லை. அவளிடம் பதிலும் இல்லை.

 

ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், நடப்பது நடக்கட்டும் என்று நகர்ந்து விட்டாள்.

 

ஆனால் தமிழரசியால் அப்படி எல்லாம் நினைக்க முடியவில்லை. அவருக்கு மாதவியையும் நிலாவையும் விட்டு இருப்பதை எல்லாம் தாங்கவே முடியாது என்று புரிந்தது.

 

நேராக அவர் நின்றது என்னவோ ஆருத்ரன் முன்னால் தான்.

 

அவனோ அவரை பார்க்க, தமிழரசியோ, "ஆரு நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ எனக்கு மாதவி என் வீட்டுக்கு மருமகளா வரணும்" என்று குண்டை போட்டு இருந்தார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 1

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 2