இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 4
இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!
பிறவி 4
கதிரவன் அவனை அழைத்ததற்காகவே எழுந்து அமர்ந்து இருந்தான் அதர்வ். அதர்வவர்ஷன்!
முப்பது வயது ஆக போகிறது. ஆனால் வெளியே சொன்னால் தான் யாரும் நம்புவது இல்லை. அவன் தான் எப்போதும் இருபத்தி ஐந்து வயதானவன் போல் தோற்றத்துடன் இருக்கிறானே!
அழகன் தான்! ஆறடிக்கு அதிகமாக அசரடிக்கும் அழகில் வளர்ந்து இருந்தான். அவனின் இந்த ஜென்மத்தின் தந்தையை அப்படியே பின்பற்றி கிரிக்கெட் வீரனாக ஆகி இருந்தான். முற்பிறவியில் அவனுக்கு தான் கிரிக்கெட் என்றால் உயிர் ஆயிர்றே!
அவனின் இந்த ஜென்மத்தின் தந்தை சிவராஜ்! சிறந்த கிரிக்கெட் வீரர்! கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர் இப்பொது குடும்ப தொழிலான அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை எடுத்து நடத்த துவங்கி இருந்தார். அதே போல விளையாட்டு வீரர்கள் உபயோக படுத்தும் பொருட்களுக்காக ஒரு புது நிறுவனத்தையும் நிறுவி இருந்தார். அதிலேயே அவர்களுக்கு கோடிகளில் வருமானம் தான் வந்து கொண்டு இருந்தது.
சிவராஜின் மனைவி சங்கரி குடும்ப தலைவி! அவர்களுடையது பெற்றவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான். கிரிக்கெட் வீரரான சிவராஜிற்கு முதலில் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை தான் ஆனால் திருமணத்திற்கு பின்னால் சங்கரின் குணம் அறிந்து அவரை காதலிக்கவும் துவங்கி இருந்தார். சாந்தமாக, பொறுப்பாக, மென்மையாக இருக்கும் மனைவியை பிடிக்காமல் போகுமா என்ன?
இத்தனைக்கும் சிவாராஜிற்கு முன்பு ஒரு காதலி இருந்து அவளுடன் இருந்தது உட்பட சங்கரிக்கு தெரியும். சிவாராஜும் எதுவும் மறைத்தது இல்லை. அதுவும் காதல் கட்டில் வரை சென்றும் இருந்தது.
"உனக்கு இதெல்லாம் புதுசுன்னு எனக்கு தெரியும். பிடிக்கலைன்னா வேண்டாம்னு சொல்லிடு" என்று கிராமத்தில் பெண் பார்க்கும் இடத்தில சொல்ல, அவரோ, "கல்யாணத்துக்கு பிறகு எனக்கு உண்மையா இருந்தா போதும்" என்றதுடன் முடித்து கொண்டார். அந்த காலத்திலேயே அவருக்கு அந்த பக்குவம் இருந்தது.
இது தான் சங்கரின் பின்னால் சிவராஜ் செல்ல பெரிய காரணம்.
அதற்கு பிறகு என்ன திருமணம் முடிந்து மணிமணியாய் இரண்டு ஆண் பிள்ளைகள். முதலில் பிறந்தவன் தான் நம் நாயகன் அதர்வ். இரண்டாவது பிறந்தவனும் நம் மற்றோரு நாயகன் ரிதேஷ்.
காதல் கிடைக்காத தோற்ற இருவருக்கும் காதலில் ஜெயிக்கவே சங்கரி அவர்களை இப்பூவுலகிற்கு கொண்டு வந்து இருந்தார் போலும்!
அதர்வ் கொஞ்சம் அழுத்தமானவன் தான். ஆனால் அவனுக்கு நெருக்கமானவர்களுக்கு அன்பானவன் தான்.
அதற்கு அப்படியே எதிர் மறை தான் ரிதேஷ். அவனை விட இரண்டு வயது தான் சின்னவன். ஆனால் அனைவரையும் அகமகிழ்வித்து அவர்களின் அகத்தையும் சேர்த்தே கவர்ந்து விடுவான்.
இப்படி இருவேறு துருவங்களை பெற்றவர்கள் தான் பல நேரம் இருவருக்கும் இடையில் சிக்கி கொள்வார்கள்.
"உங்க பெரிய மகன் இன்னைக்கு சுடு தண்ணி கொட்டுன போல வருவான் பாருங்க அம்மா" என்று அப்போது தான் அவன் சொன்னது போலவே அவனின் உடற்பயிற்சி செய்து குளித்து முடித்து, அவனின் பிராண்டட் டி ஷார்ட் மற்றும் ஜீன்ஸ் போட்டு கொண்டு கெத்தாக ரிதேஷ் சொன்னது போலவே வேகமாக இறங்கி கீழே வந்தான்.
பொட்டுக்கும் அதில் சிரிப்பு இல்லை. "சொன்னேன்ல" என்று அப்போதும் அன்னையிடம் வாய் அடித்து கொண்டு இருந்தான் ரிதேஷ்.
அவன் வந்து அமைதியாக உணவு மேசையில் அமர, சிவராஜும் வந்து அமர்ந்தார். ரிதேஷ் தந்தைக்கு துணையாக தொழிலில் உதவி செய்து கொண்டு இருந்தான்.
தொழிலில் புலி தான் ஆனால் வீட்டில் எலி அவன்.
"ஏன் டா இப்படி இன்ஜி தின்ன குரங்கு போல முகத்தை வச்சிக்கிட்டு இருக்க?" என்று ரிதேஷ் கேட்டே விட்டான்.
அதர்வ் அவனை பார்த்து முறைத்தவன், "நீ எனக்கு தம்பியா இல்ல அவனுக்கு தம்பியா?" என்று கேட்கவும், ரிதேஷ் யோசிக்கவே இல்லை, "அபராஜித்க்கே தம்பியா பிறந்து இருக்கலாம்..." என்று பெருமூச்சு எடுத்து விட்டவன், "என் கிரகம் உன்னை மாதிரி ஒரு கிறுக்கனுக்கு தம்பியா பிறந்து தொலைச்சிட்டு இருக்கேன்" என்று அவன் பாவமாக பார்க்க, "அம்மா இவனை எந்த குப்பை தொட்டிலை இருந்து எடுத்துட்டு வந்தீங்க?" என்று கோவமாக அவன் அன்னையை பார்க்க, "உன்னை எந்த குப்பைல இருந்து எடுத்துட்டு வந்தார்களோ அதே குப்பைல இருந்து தான் டா" என்று அவனும் விடாமல் பேசினான்.
"இரண்டு பேரும் வாயை மூடிட்டு சாப்பிடல, சோத்துல விஷத்தை வச்சிருவேன் பார்த்துக்கோங்க" என்று சங்கரி கரண்டியுடன் மிரட்டவும் தான் அமைதியாக ஆகினர்.
சிவராஜோ இதான் சாக்கு என்று, "இதுக்கு தான் டி ஒரு பொண்ணை பெத்து கொடுன்னு சொன்னேன். இப்படி இரண்டு குரங்கை பெத்து வச்சி இருக்க.. ஒருத்தன் என்னடானா இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கான். இன்னொருத்தன் என்னடானா மரத்துக்கு மரம் தாவிர சேட்டை பன்றான்" என்று சொல்லிக்கொண்டு இருந்தவரின் தட்டில் தோமென்று இரண்டு இட்லிகள் விழுந்தது.
"குரங்குக்கு பிறக்குறது மட்டும் என்ன மனுஷனாவா இருக்கும்? உங்களை மாதிரியே தான் இருக்கானுங்க இவனுங்களும்" என்று சொல்லிக்கொண்டே அனைவருக்கும் உணவு பரிமாற, சிவராஜோ, "அபராஜித் கிட்ட சண்டை போடாம மீட்டிங் முடிச்சிட்டு வா வர்ஷன். கோச் போன தடவையே கம்பளைண்ட் பண்ணார். பெஸ்ட் பிலேர்ஸா இருந்தா மட்டும் போதாது. டிசிப்ளின் இருக்கனும்" என்று தந்தையாக மட்டும் அல்ல ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரருமாக அறிவுரை கூற, "உங்க கிட்ட உங்க நண்பன் மகனோட நம்பர் இருக்கு தானே? அப்படியே இதை அவன் கிட்டையும் சொல்லுங்க... நான் ஒன்னும் ஆரம்பிக்கிறது இல்ல... நான் எது சொன்னாலும் முடியாதுன்னு சொல்றதுல தான் முன்னாடி நிக்குறான்" என்றவனை இடை மறைத்து, "நீ ஏதாவது உருப்படியா சொன்னா அபி ஏன் டா வேணாம்னு சொல்ல போறான்? என்கிட்டலாம் அந்த மாதிரி நடந்துக்கிட்டது இல்ல" என்று ரிதேஷ் வேறு அபிக்காக ஒத்து ஊதவும், "இது ஏன் வீடா இல்ல அவன் வீடான்னு எனக்கு தெரியல" என்று கடுப்பாக சாப்பிட்டு முடித்து எழுந்தும் கொண்டான்.
கிளம்பும் சமயம் சங்கரி இடைமறித்து, "இதை அவனுக்கு கொடுத்துரு என்கவும், "அவனுக்கு நான் எடுத்துட்டு போகணுமா?" என்று அவன் சீற, "அகரனுக்கும் வச்சி இருக்கேன் வர்ஷன்" என்று சங்கரி பாவமாக முகத்தை வைத்து கொள்ள, அன்னையிடம் சண்டை போட முடியாது என்று நினைத்தவன் அப்படியே அதை எடுத்து கொண்டு அவர்களின் குழு கூடி இருக்கும் இடத்திற்கு சென்று இருந்தான்.
அங்கு கோச் துரைமுருகன் அகரனை தான் வெளுத்து வாங்கி கொண்டு இருந்தார்.
"இங்க பாரு அகரன் உங்க நண்பனுங்க இரண்டு பேரும் இன்னைக்கு ஏதாவது பன்னானுங்க வச்சிக்கோ..." என்று அவர் இழுக்கும் போதே, "கோச் அவனுங்க எதுவும் பண்ணாம நான் பார்த்துக்கறேன். பண்ணா இந்த தடவை இவனுங்களுக்கு நீங்க பனிஷ் பண்ணுவீங்கன்னு சொல்லி இருக்கேன்" என்றவனை இடைமறித்து, "பனிஷ்மென்ட் அவனுங்களுக்கு இல்ல, உனக்கு தான் நினைவு இருக்கட்டும்" என்று மிரட்ட, அகரனோ நெஞ்சில் கை வைத்து கொண்டான்.
அவன் அவன் இரண்டு மூன்று காதலிகளை வைத்து கஷ்டப்படும் இந்த காலத்தில் பாவம் அகரன் இப்படி இரண்டு சைத்தான்களை நண்பர்களாக வைத்து கடினப்பட்டு கொண்டு இருக்கிறான்.
அகரனுக்கும் முப்பது வயது நெருங்கி இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்பொது இருக்கும் இந்திய அணியில் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒரே கிரிக்கெட் வீரன் அகரன் தான்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்தவனுக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் என்றால் உயிர், அவனின் திறமையை கண்டு நிறைய ஸ்பான்சர்ஸ் கிடைக்கவும் தான் ரஞ்சி கோப்பையில் விளையாடி அண்டர் நைன்டீன் டீமிலும் இடம் பிடித்தான். அதற்கு பிறகும் அவனுக்கு அவனின் நிலையை தக்க வைக்க பல போராட்டங்கள். ஆனால் அவனுக்கு அப்போது அதர்வின் நட்பு கிடைத்து இருக்க, அனைத்தையும் தேறி வந்தான்.
அதற்கு பிறகு அவனுக்கு கிடைத்த நண்பன் தான் அபராஜித். அகரனுக்கு அபராஜித்தை பிடித்ததோ இல்லையோ, அபராஜித்திற்கு அகரனை மிகவும் பிடித்து இருந்தது. எதற்கும் யாரிடமும் கை கட்டி நிற்காமல் அவனின் திறமையை வைத்தே முன்னேறி வந்தவனை பார்க்க அவனுக்கு வியக்க தான் செய்தது. அதுவும் அகரனின் கேலி பேச்சும், எப்போதும் முகத்தில் இருக்கும் சிரிப்பும் கூடுதல் அழகு.
இவர்கள் எல்லாம் வெள்ளை வெளேரென்று இருக்கும் போது, மாநிறத்திற்கும் குறைவான நிறத்தில் வசீகரமாக இருக்கும் அவனுக்கு பெண் விசிறிகள் ஏராளம் தான்.
யாரையும் அதிர்ந்து பேசாத அவனது குணம் அனைவரையும் அவன் பால் ஈர்த்து இருந்தது.
அவனின் கிராமத்தை பற்றி நிறையவே சொல்லியும் இருந்தான். ஆனால் இன்று வரை அவர்கள் யாரும் செல்ல வில்லை. ஆனால் அவனின் கிராமத்தில் அவர்களின் நிலையை உயர்த்தி இருந்தான். அதுவும் இப்பொது அவனின் வீடு தான் அந்த கிராமத்திலேயே பெரிய வீடு என்கிற அளவிற்கு இப்பொது அவனின் உயரம் தொட்டு இருந்தது.
அவனின் அன்னை தந்தையுடன் இவர்கள் அனைவரும் வீடியோ காலில் உரையாடி தான் இருந்தார்கள்.
அபராஜித் மற்றும் அதர்வ் சண்டை போடும்போதெல்லாம் சாமாளித்து அவர்களை சரி கட்டி எப்படியோ வீடு வந்து சேர்ப்பது அவனின் பொறுப்பு தான். இதனாலேயே இரு வீட்டினருக்கும் அகரனை மிகவும் பிடிக்கும்.
சிவராஜும் புஷ்பலிங்கமும் பாலிய சிநேகிதர்கள். ஆதலால் குடும்பங்களுக்கு நடுவே நல்ல பிணைப்பு இருந்தது. நந்தினிக்கு அபராஜித் ஒரே மகனாக இருந்து விட, ரிதேஷ் தான் இரு குடும்பங்களுக்கும் செல்ல பிள்ளையாக மாறி இருந்தான். இந்த இரண்டு தடி மாடுகளும் எப்போதும் முகத்தை உர் என்று வைத்து இருப்பதால், எப்போதும் சிரித்து கொண்டே இருக்கும் ரிதேஷ் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து இருந்தான்.
இதற்கு அடுத்து அகரன் தான்!
பெற்ற தாய்மார்களுக்கே அவர்கள் பெற்ற மகன்களை சமாளிக்க முடியாத போது அகரன் எப்படி சாமளிக்கிறானோ என்கிற கேள்வி அனைவர் இடத்திலும் எழ தான் செய்தது.
இதோ வந்து விட்டார்கள் ஒன்றாக குழுவின் கூட்டத்திற்கு! இந்த கூட்டத்தில் என்ன குளறுபடி எல்லாம் நடக்க போகிறதோ?
ஆனால் இவர்கள் இப்படி இருக்க, இவர்களின் துணைகளோ அகரனின் கிராமத்தில் வயல் வெளியில் நாற்று நட்டு கொண்டு இருந்தார்கள்.
"அடியேய் இளவஞ்சி!" என்கிற சுப்பு என்கிற சுப்ரியாவின் குரலில் திரும்பி பார்த்தாள் முற்பிறவியில் இஷானாவாக பிறந்த இந்த பிறவி இளவஞ்சி.
கருத்துகள்
கருத்துரையிடுக