இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 5

 

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 5

 

நம் கதாநாயகர்கள் அனைவரும் ஒவ்வொரு ரகமாக இருக்கிறார்கள் என்றால், நம் கதாநாயகிகள் அனைவரும் கூட ஒவ்வொரு ரகம் தான். என்ன அவர்களை போல சண்டை எல்லாம் போடாமல் நெருங்கிய தோழிகள் தான் நால்வரும்! சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள்.

 

முதலில் இளவஞ்சி!

 

அவளின் தாய்க்கு ஒரே மகள். ஆனால் தந்தைக்கு மூன்று மகள்களில் முதல் மகள். செல்வச்செழிப்பில் பிறந்தவளை இறைவன் விவாசியின் மகளாய் பிறக்க வைத்து இருந்தார். ஆனால் அன்றும் இன்றும் அவளுக்கு தாய் மடி மட்டும் எட்டாக்கனியாக தான் இருக்கிறது. அவளின் தாய் இறந்த பிறகு, அவளின் தந்தை இரண்டாவது திருமணம் செய்தும் கொண்டார். அவர்களுக்கும் இரண்டு மகள்கள் பிறக்க, இளவஞ்சி தனித்து தான் விட பட்டு இருந்தாள். அன்னையின் பாசம் இல்லை என்றாலும் பரவாயில்லை, தந்தையின் அரவணைப்பும் கூட அவளுக்கு கிள்ளி கொடுப்பது போல் தான் கொடுக்கப்பட்டது. அவளது தந்தை அவளை நெருங்கினாலும் அவளின் சித்தி விட வேண்டுமே! கொடுமை எல்லாம் இல்லை ஆனால் அவர் பெற்ற மகள்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தான் இருந்தார். தனிமையின் சூழலில் தான் அவளது வாழ்வு இருந்தது. ஆனால் அவளின் தனிமையை போக்கவே தான் இருந்தார்கள் அவளின் மூன்று தோழிகள்.

 

அவளின் நெருங்கிய அடாவடி தோழி சுப்ரியா!

 

சுப்பு என்று அனைவராலும் அழைக்க படுபவள். ஆணுக்கு ஆணாக பெண்ணுக்கு பெண்ணாக இருப்பவள். தைரியம் என்றால் அசட்டு தைரியம் என்று கூட சொல்லலாம். அவளை அடக்க எவன் வருவானோ என்று அவர்களின் ஊரே காத்து கொண்டு இருக்கிறது என்றால் அவள் எப்படி என்று யாரு சொல்லியும் தெரியவேண்டாம். அவளுக்கும் தாய் இல்லை தான். ஆனால் அவளின் தாய் மூன்று வருடங்களுக்கு முன் தான் இறந்து இருந்தார். அவளுக்கு சுதர்ஷனா என்கிற தங்கையும் இருக்கிறாள். அவளுக்கு எல்லாமே அவளின் தோழிகள் தான். சுதர்ஷனா பட்டினத்தில் படித்து கொண்டு இருந்ததால், அவளின் உலகை இப்போதெல்லாம் சிரிப்பால் இயக்கி கொண்டு இருப்பது என்னவோ அவளின் பால்ய சிநேகிதிகள் தான்.

 

அவர்கள் நால்வரில், நால்வருக்கும் சேர்த்து இவள் ஒருவளே பேசுவாள். சுப்ரியா இருக்கும் பொது மற்ற மூவரையும் கூட ஒருவரும் நெருங்க முடியாது.

 

அடுத்தது வேறு யார் நம் ஜானகி தான்! ருத்ரனின் முன்னால் காதலி என்று சொன்னால் அனைவருக்கும் விளங்கும். அது அப்போது இப்பொது அவள் ஜானகி மட்டும் தான்.

 

ஜானகி அந்த ஊரில் வாத்தியாரின் மகள். இப்பொது அவளும் இவர்களுடன் சேர்ந்து விவசாயம் தான் பார்த்து கொண்டு இருக்கிறாள். இதில் அவளின் தாய்க்கும் தகப்பனுக்கும் கொஞ்சம் மனசுணக்கம் என்றாலும், ஒற்றை பிள்ளையாய் இருக்கும் அவளுக்கு அவளின் தோழிகளுடன் நேரம் செலவிடுவது தான் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு என்பதால் அவளை அப்படியே விட்டு விட்டனர். பெண்ணின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று இருக்கும் பெற்றோர்.

 

இறுதியாக தாரிகா!

 

அகரனின் பக்கத்து வீட்டு பைங்கிளி! தாரிக்காவிற்கு மட்டும் தான் இதில் தம்பி இருந்தான். பெயர் தர்ஷன். அவன் தான் இவர்களுக்கு நொறுக்கு தீனி எல்லாம் வாங்கி கொண்டு வந்து கொடுக்கும் எடுபிடி. அதை அப்படி சொல்லாமல், "நீ ஒருத்தன் தானே டா ஆம்பளை பிள்ளை.. அக்காங்களுக்கு செய்ய மாட்டியா?" என்று கொஞ்சியே அவனை வேலை செய்ய வைத்து விடுவார்கள். எல்லாமே கேடிகள் தான்.

 

இப்பொது நாயகிகளின் உருவத்தை பற்றி என்ன சொல்வது? அனைவரும் ஒரே மாநிறத்தில் தான் இருப்பார்கள். வெயிலில் வயலில் வேலை செய்பவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி தான் நம் நாயகிகளும்! சாதாரண உயரத்தில் பக்கத்து வீட்டு பெண்களை போல் தான் இருப்பார்கள். ஆனால் கலையான முகத்தை ஆண்டவன் அருளிதான் இருந்தான்.

 

என்ன தான் இந்த காலத்தில் அனைவரும் விதவிதமாக படித்து இருந்தாலும், நம் நாயகிகள் அனைவரும் எம்எஸ்சி அக்ரி படித்தவர்கள்.

 

இறுதியாக சோறு தானே சாப்பிட போகிறோம். அதையே படிக்கிறோம் என்று ஒன்றாக சென்று படித்து இதோ வேலையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். நால்வருமே மஞ்சள் முகத்தழகிகள் தான்.

 

இன்றளவில் பெண்கள் மாடர்னாக உடை அணிந்து வளம் வர, நம் நாயகிகளோ, "தாவணி போட்ட தீபாவளி வந்ததது என் வீட்டுக்கு" என்று பாடுபவனை தான் கட்டுவேன் என்று நின்று கொண்டு இருக்கும் இருபத்தி ஐந்து வயது பெண்மணிகள்.

 

ஊரில் அனைவருக்கும் இருபத்தி ஒரு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள் தான். ஆனால் அவர்கள் முதுகலை முடிக்கவே இருபத்தி இரண்டு வயது ஆகி விட்டது. அதற்கு பிறகு அவர்கள் வைத்த விதிமுறைகளுக்கு உட்பட்ட மாப்பிள்ளை எல்லாம் கிடைக்கவே இல்லை. அப்படியே மீறி மாப்பிள்ளை பார்க்க வந்தாலும், நம் நாயகிகள் அனைவரும் அவர்களை மிரட்டி உருட்டி அனுப்பி வைத்து விடுவார்கள்.

 

இளவஞ்சி தான் இவர்கள் நால்வரில் வாயில்லாத ஜீவன். சித்தியின் பாதுகாப்பில் இருப்பதால், அவர் சொல்லும் சுடு சொற்களை தாங்கி கொண்டு இருக்கிறாள்.

 

"நீ பேசாத என் வீட்டுக்கு வந்திரு டி" என்று சுப்ரியா சொல்லும் போதெல்லாம், வெறும் கசந்த புன்னகையை மட்டும் அவளுக்கு பரிசாக கொடுப்பாள். அப்படி விட்டு விட்டும் வர முடியாதே! அவளது தந்தை கணேசனுக்கு முன்னமே குற்ற உணர்ச்சி இருந்தது. ஆதலால், அவரை மேலும் வதைக்க வேண்டாம் என்று அவளது சித்தி உலகநாயகி என்ன சொன்னாலும் வாயை மூடி கொண்டு இருப்பது தான் விதி என்று இருந்து கொள்வாள்.

 

"அடியேய் இளவஞ்சி" என்று சுப்ரியா அழைக்க, "இங்க தானே டி இருக்கேன். ஏன் இப்படி நாலு ஊருக்கு கத்துற?" என்று முறைத்து அவளை பார்க்க, "விஷயம் அப்படி தான் டி அதனால தான் கத்துறேன்" என்றவளை புருவம் சுருக்கி பார்க்கவும், "அது வேற ஒன்னும் இல்ல டி.. நம்ப தாரிக்கவை இன்னும் இரண்டு நாள்ல பொண்ணு பார்க்க வரங்களாம்" என்று ஜானகி தான் முடித்து இருந்தாள்.

 

"அப்படியா?" என்று இளவஞ்சி தாரிக்கவை பார்க்க, அவளோ எதையோ பறிகொடுத்தது போல் அமர்ந்து இருந்தாள்.

 

"விடு டி இந்த தடவையும் காரை பங்ச்சராக்கி விட்டுடலாம்" என்று இளவஞ்சி சொல்ல, "அதெல்லாம் இந்த தடவை முடியாது டி" என்று உடனே சொல்லி இருந்தாள் சுப்பு.

 

"ஏன் ஏன் முடியாது?" என்று இளவஞ்சி கேட்க, "ம்கூம் வரவங்க கார்ல வந்தா பரவால்ல... பக்கத்து வீட்டு காரங்களை எப்படி டி நிறுத்தறது?" என்று ஜானகி சொல்லவும், இளவஞ்சிக்கோ கண்களை விரித்து, "வேதாச்சலம் மாமா தான் அவங்க பையனுக்கு பொண்ணு கேட்டு வாராரா?" என்ற இளவஞ்சியை பார்த்து தரிக்காவும் பாவமாக ஆமாம் என்று தலையசைத்தாள்.

 

"அப்போ நீ சென்னை இல்ல மும்பை போய்டுவ தானே?" என்று கேட்ட இளவஞ்சிக்கு தெரியாது, அவர்கள் அனைவருமே ஒன்றாக தான் விரைவில் குடி பெயர போகிறார்கள் என்று!

 

"அட போ டி எனக்கு இந்த கல்யாணத்தை நிறுத்தவே முடியாதுன்னு கஷ்டமா இருக்கு. என் அப்பா ரொம்ப தீவீரமா இருக்கார். அதுவும் அகரன் வேற இப்போ கிரிக்கெட்டர். இதை எல்லாம் விட என் கூட பிறந்து இருக்கானே அந்த தடிமாடு, அவன் வேற நேத்து, "அக்கா மாமா கிரிக்கெட்டர் அக்கா.. என்னை அபராஜித், அதர்வ்வை எல்லாம் இன்ட்ரோ பண்ண சொல்லுங்கன்னு உயிரை எடுக்குறான்" என்று அவள் புலம்ப, "எங்க அந்த தர்ஷன் அவன் தலைலயே அடுத்த தடவை கொட்டலாம்" என்று பொருமினாள் ஜானகி.

 

இளவஞ்சியோ, "விடு டி நல்ல பையன் தானே கல்யாணம் பண்ணிக்கோ, கங்கை அத்தை வேதாச்சலம் மாமா ரொம்ப நல்லவங்க.. அகரனையும் நமக்கு தான் சின்ன வயசுல இருந்தே தெரியும் தானே... என்ன பெருசா பேசுனது இல்ல.. நம்பலை பார்த்தா வெறும் சிரிப்போடு அவர் எப்பவும் போயிருவாரு... கங்கா அத்தை அவங்க பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லன்னு தான் சொல்லி இருக்காங்க.. உன் வாழ்க்கையும் நல்லா இருக்கும்... இப்போ எல்லாம் நல்ல பையன் கிடைக்கறதே கஷ்டம்" என்கிறவளை பார்த்து, "அடியேய்! அவளே ஊரை விட்டு, வயக்காட்டை விட்டு எல்லாம் போகணுமேன்னு கவலை படுறா.. நீ வேற" என்று அவளை தேற்றி கொண்டு இருந்தாள் சுப்ரியா.

 

"இரண்டு நாள் கழிச்சி தானே டி வராங்க... இப்பவே ஏன் முகத்தை திருப்பி வைக்குற? அப்போ பார்க்கலாம்... நீ கவலை படாத.. நல்ல பையனா இல்லனா நம்மளே அடிச்சி விரட்டிடலாம்" என்று ஜானகியும் சொல்ல, அப்போது தான் கொஞ்சம் தேறி இருந்தாள் தாரிகா. அவளுக்கு உண்மையாக ஊரை விட்டு செல்ல மனமே இல்லை. பக்கத்து வீட்டில் இருந்தவன் தான், உண்மையை சொல்லப்போனால் அவளின் பதினாறு வயதில் அவனை பார்த்து சைட் எல்லாம் கூட அடித்தது உண்டு தான். ஆனால் திருமணம் என்றெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை. அந்த வயதிற்கே உரிய ஈர்ப்பு அப்போது இருந்தது அவ்வளவு தான்.

 

வேதாச்சலம் மற்றும் கங்கா தம்பதியருக்கோ மகன் கிரிக்கெட் வீரன், எங்கே ஏதாவது நடிகை அல்லது மாடலை இவள் தான் மருமகள் என்று கூட்டி கொண்டு வந்துவிடுவானோ என்று பயம் இருந்தது.

 

எத்தனையோ பெண்களை பார்த்தும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. பின்பு தான் ஒரு நாள் கோவிலுக்கு செல்லும் தாரிக்காவை கங்கா பார்த்தார். கையில் வெண்ணையை வைத்து கொண்டு ஏன் நெய்க்கு அலைய வேண்டும் என்கிற எண்ணம். தாரிக்காவின் குடும்பமும் அகரனும் குடும்பமும் ஒரே ஜாதி வேறு!

 

ஜாதகத்தை வாங்கி பார்த்தார்கள். அவர்களின் நல்ல நேரத்திற்கு இருவர்க்கும் பொருந்தியும் வந்தது.

 

நேற்று தான் இது தாரிக்காவின் செவிகளை அடைந்தது. இதில் என்ன கூத்து என்றால், அவளுக்காவது நேற்று தெரியும். அகரனுக்கு இப்பொது வரை எதுவும் தெரியாது. அவன் தான் அவனின் இரண்டு நண்பர்கள் என்கிற நரகாசுரங்களுடன் போராடி கொண்டு இருக்கிறானே!

 

அவனுக்கு அந்த இருவரை மேய்க்கவே நேரம் சரியாக இருக்க, ஒரு வருடமாக, "கல்யாணம் பண்ணிக்கோடா" என்று சொல்லும் அன்னை தந்தையிடம், "ம்கூம் இங்க ஆல்ரெடி இரண்டு எருமைக்கு வாக்கப்பட்டு நான் படுற பாடு பத்தாதா? இதுல இன்னொருத்தியை மடியில கட்டிக்கிட்டு வேற நான் தெரியனுமா?" என்று தட்டி கழித்து விட்டான்.

 

இதோ இப்பொது கூட அவர்கள் இருவருக்கு நடுவில் மாட்டி கொண்டு முழித்து கொண்டு இருக்கிறான். அவர்களின் கோச் அகரனை தான் முறைத்து கொண்டு இருந்தார்.

 

இங்கோ பேப்பர்களை பறக்க விட்டு கொண்டு இருந்தார்கள் அதர்வ் மற்றும் அபராஜித்.



கருத்துகள்