இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 7

 

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 7

 

அகரனோ அவனின் ஊரிற்கு அவனின் நண்பர்களுடன் கிளம்பி இருந்தான்.

 

"என்ன டா தூக்கம் இல்லையா?" என்று ஹரன் அதர்வ்வை பார்த்து கேட்க, "ஹான், கொஞ்சம் கெட்ட கனவு" என்று சொன்னவன் முகத்தை திருப்பி கொண்டான்.

 

வண்டியை ஓட்டி கொண்டிருந்த அபராஜிதோ, "பாரேன் பேய்க்கு கனவெல்லாம் வருது" என்று சொல்ல, "அதை ஒரு பிசாசு சொல்லுது பாரு" என்று அதர்வ்வும் பதிலுக்கு பேசினான்.

 

அகரனுக்கோ, 'இவனுங்களை வச்சிகிட்டு நான் ஊருக்கு வேற போறேன். என் ஊரை இவனுங்க கொளுத்தாம இருந்தானுங்க தான் சரி' என்று நினைத்தவனுக்கு தெரியாது. இவர்கள் நால்வரையும் கொளுத்துவதற்கு அங்கே நாலு நல்ல பிள்ளைகள் காத்து கொண்டு இருக்கிறார்கள் என்று!

 

"அகரன் ப்ரோ இவங்களை எல்லாம் நம்பி நீங்க பொண்ணு பார்க்க போறீங்க... உங்க தைரியத்தை கண்டு நான் வியக்குறேன்" என்று ரிதேஷ் சொல்ல, "ம்கூம் நீ வேற ஏன் டா" என்று ரிதேஷை பார்த்து கேட்டான்.

 

இங்கோ, இளவஞ்சி, ஜானகி மற்றும் சுப்ரியா மூவரும் அமர்ந்து இருந்தனர்.

 

"ஹே என்ன டி தரிக்கா அப்பா வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லிட்டாரு" என்று ஜானகி கேட்க, "எல்லாம் அந்த சிலுவண்டு அவளோட தம்பி பண்ண வேலை தான்...  நம்ப தான் அவளுக்கு வர மாப்பிள்ளை எல்லாம் தடுக்குறோம்னு போட்டு கொடுத்துத்தான். அகரன் வேற இன்னைக்கு அவன் பிரண்ட்ஸ் கூட வறானாம். அவனுக்கு அவங்களை பார்க்கணும்னு நம்பலை போட்டு கொடுத்துத்தான். வரட்டும் அக்கா சொக்கான்னு அந்த தர்ஷன் வாயை தைக்குறேன் இரு" என்று பொரிந்து தள்ளினாள் சுப்ரியா.

 

இதே சமயம் இளவஞ்சியின் கைப்பேசி அலறியது. தரிக்கா தான் அழைத்து இருந்தாள்.

 

"என்ன டி?" என்று இளவஞ்சி கேட்க, "ஏன் டி வீட்டுக்கு வரல.. இப்போ நான் எப்படி மாப்பிள்ளையை விரட்டுறது?" என்று அவள் கேட்டது மீதி இருவரின் செவிகளிலும் கூட விழுந்தது.

 

"இங்க கொடு" என்று அந்த கைப்பேசியை பறித்து எடுத்த சுப்ரியா தான், "அடியேய் உன் கூட பிறந்து இருக்கே அந்த வானரம் அது தான் எங்களை போட்டு கொடுத்திருச்சு.. உங்க அப்பா எங்களை வீட்டுக்கு பக்கம் இன்னைக்கு வரவே கூடாதுனு சொல்லிட்டாரு டி" என்று சொல்லவும், "ஐயோ இப்போ என்ன பண்றது?" என்று சொல்லவும், "யு டோன்ட் வரி.. நாங்கள் இருக்க பயமேன்" என்றவள் அப்படியே அவள் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லி இருந்தாள்.

 

"ஜானு நீ கிளம்பு.. உனக்கு கொடுத்த டாஸ்கை பண்ணு" என்று சொன்ன சுப்ரியா இளவஞ்சியை அழைத்து கொண்டு சென்று இருந்தாள்.

 

கிட்டத்தட்ட ஒரு மணி அளவில் அகரனின் ஊருக்கு வந்து இருந்தார்கள்.

 

வந்தவர்களின் காரின் பின்புற கண்ணாடியை யாரோ கல் கொண்டு அடித்து இருந்தனர்.

 

"ஷிட்" என்று கத்தி இருந்தான் அபராஜித். அவனது புது கார் தான் அது!

 

வண்டியை நிறுத்தியவன், அப்படியே காரை நிறுத்தி கீழே இறங்கவும், மீதி மூவரும் கூட இறங்கினார். அவர்கள் ஷுவில் கீழே படிந்து இருந்த சேர் மொத்தமாக நனைத்து இருந்தது.

 

"ப்ரோ... என்ன ப்ரோ இது?" என்று அகரனை பார்த்து ரிதேஷ் கேட்கவும், "சேறு டா தெரியாது?" என்று சொன்ன அகரனை பார்த்து அபராஜித் தான் முறைத்தான்.

 

"என்ன டா இதெல்லாம்? ஊருக்குள்ள போகும் போதே இப்படியா?" என்று சொல்லிக்கொண்டே அப்போதும் விடாமல் இறங்கி இருந்தான் அபராஜித்.

 

அவனின் லேசர் விழிகளை எங்கும் அலையவிட்டவனால் யார் கல்லை அடித்தார்கள் என்று பார்க்க முடியவில்லை. ஆனால் அவனின் மூக்கிற்கோ நித்திய மல்லி வாசம் வந்து சேர்ந்தது.

 

"யாராவது சின்ன பசங்களா இருப்பாங்க டா" என்று அகரன் சொல்ல, "பசங்க இல்ல பொண்ணுங்க" என்று சொல்லி இருந்தான் அபராஜித்.

 

அதர்வ்வும் கூட, "நித்திய மல்லி வாசனை வருது பாரு.. எந்த பசங்க பூ வைக்குறாங்க?" என்று கேட்டு இருந்தான். அவனும் இதை அனைத்தையும் சுதாகரித்து தான் இருந்தான்.

 

இங்கோ இளவஞ்சி, "என்ன டி இப்படி பார்த்தது போல சொல்ராணுங்க" என்று கேட்கவும், "ஷ்ஷ் அமைதியா இரு டி இவனுங்களுக்கு கழுகு கண்ணு, நாய் மூக்கு போல, பாம்பு காதும் இருந்தா நம்ப இப்படி பேசுறதையும் கண்டு பிடிச்சிருவானுங்க" என்று அடக்கி இருந்தாள்.

 

"டேய் இங்க எல்லாம் நிறைய மரம் கொடி இருக்கும்" என்று அகரன் அப்போதும் சொல்ல, "சுத்தி பாரு வெறும் வயல் தான் இருக்கு... இங்க நித்யமல்லி கொடி எப்படி வரும்" என்று சொல்லிக்கொண்டே அபராஜித் ரோட்டின் ஓரம் இருந்த ஒரு கொலுசை எடுத்தான்.

 

"பொண்ணுங்க தான்" என்று சொன்னவன் கொலுசை எடுத்து காட்ட, அப்போது தான் அவளின் காலில் இருக்கும் கொலுசு கழண்டு விழுந்து இருப்பதை பார்த்தாள் சுப்ரியா.

 

"போச்சு போச்சு என் அப்பா வச்சி செய்ய போறாரு" என்று இளவஞ்சியை பார்க்க, சுப்ரியாவின் வாயை மூடி இருந்தாள் இளவஞ்சி.

 

மீண்டும் ஒரு முறை பார்வையை சுழல விட்டவர்கள், அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.

 

"இந்த கொலுசுக்கு சொந்தக்காரி மட்டும் என் கைல கிடைக்கட்டும்" என்று அபராஜித் சொல்லும் போதே, "கிடைச்சா என்ன பண்ணுவ" என்று அதர்வ் கேட்க, "விடவே மாட்டேன்" என்று முடித்து இருந்தான்.

 

பின்பு நேராக அகரனின் வீட்டிற்கு தான் சென்றார்கள்.

 

நல்ல விசாலமாக பழைய முறையில் புதுமைகள் அனைத்தும் நிறைந்து வீடு கட்டி இருந்தான் அகரன்.

 

"ப்ரோ வீடு செமையா இருக்கு" என்று ரிதேஷ் சொல்ல, "அப்போ நீ இவனுங்களுக்கு தான் சொல்லணும்.. இவங்க இரண்டு பேரும் வீட்டை எப்படி எல்லாம் டிசைன் பண்ணலாம்னு எனக்கு ஐடியா கொடுத்தானுங்க" என்றான். உண்மை தான், அவனின் ஊரிலேயே வீடு கட்ட இருப்பதால், அபராஜித்தும் சரி அதர்வ்வும் சரி, "ரொம்ப மாட்ரானா வேண்டாம் அகரன்... நம்ப பாரம்பரியம் இருக்கட்டும்.. சில பிச்சர்ஸ் மட்டும் சேர்த்துக்கலாம்" என்று அவனுக்கு அறிவுரைகளை வழங்கி இருந்தார்கள்.

 

"வாங்க ப்பா" என்று இன்முகத்துடன் வரவழைத்து இருந்தார் அகரனின் அன்னை.

 

"குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்... பொண்ணை பார்க்க அஞ்சு மணிக்கா போங்க" என்று சொல்லவும், "சரிங்க ஆன்டி" என்று சொல்லி மூவரும் சென்றனர்.

 

பின்பு அவர்களுக்கு தட்டில் பரிமாற இருந்தவரை, "ஆன்டி வாழை இலைல பரிமாருங்க" என்று ரிதேஷ் சொல்ல, அவரோ தயங்கி பார்க்க, "எங்களுக்கு வாழை இலைல சாப்பிடுறது பிடிக்கும் ஆன்டி" என்று அதர்வ் சொல்லவும், அவரும் வாழை இலை பறித்து அவர்களுக்கு பரிமாறினார்.

 

வயிறு நிறைய உண்டார்கள்.

 

பின்பு கொஞ்ச நேரம் அப்படியே கண்ணும் அயர்ந்து விட்டார்கள். நான்கு மணி அளவில் எழுந்தவர்களை கிளப்பு பெண் பார்க்க செல்லும் படி சொல்லி இருந்தார்.

 

"அம்மா நீங்க வர மாட்டிங்களா?" என்று கேட்ட அகரனை பார்த்து, "நானும் உன் அப்பாவும் தினமும் தான் தரிக்காவை பார்க்குறோம்.. நீ உன் பிரண்ட்ஸ் கூட போய் பார்த்துட்டு வா.. தர்ஷன் கூட இவங்க எல்லாரையும் பார்க்கணும்னு சொன்னான்" என்று சொல்லவும், அவனும் செல்ல, "யாரு டா தர்ஷன்?" என்று அபராஜித் கேட்கவும், "தரிக்கா தம்பி" என்றவனை பார்த்து, "உங்க மச்சானு சொல்லுங்க ப்ரோ" என்று சொல்லி இருந்தான் ரிதேஷ்.

 

"டேய் நான் இன்னும் பொண்ணை பிடிக்கும்னு சொல்லவே இல்ல டா" என்று சொல்லவும், "அதெல்லாம் சொல்லிடுவ வா" என்று அழைத்து சென்றான் அதர்வ்.

 

உள்ளே நுழையும் போதே, "வாங்க வாங்க" என்று அனைவருக்கும் முன் அழைத்து இருந்ததது என்னவோ தர்ஷன் தான்.

 

அவனுக்கு அவர்களை பார்க்க அத்தனை ஆர்வம்! அவன் இன்று வரை திரையில் பார்த்தவர்களை நேரில் காண்கிறான்.

 

வேதாச்சலம் கூட, "வாங்க தம்பி" என்று அனைவரையும் வரவேற்றவர், தர்ஷனை பார்த்து, "அம்மா கோவிலுக்கு போயிருக்கா சீக்கிரம் கூட்டிட்டு வா" என்று சொல்ல அவனுக்கு அங்கிருந்து செல்ல மனமில்லை என்றாலும் சென்று இருந்தான்.

 

"அம்மா தரிக்கா எல்லாருக்கும் காபி எடுத்துட்டு வா மா" என்று சொல்லவும், அவளும் எடுத்து கொண்டு வந்தாள். புடவை அணிந்து இருந்தாள். மிதமான ஒப்பனையில், ஒரே ஒரு செய்யின் தான் போட்டு இருந்தாள். அதற்கே அழகாக தெரிந்தாள்.

 

"ப்ரோ அண்ணி அழகா இருக்காங்க" என்று ரிதேஷ் சொல்ல, அகரனுக்கு அப்படி எல்லாம் தோன்றவில்லை போல. அவன் சிறுவயதில் இருந்தே பார்க்கும் பெண் தானே அவள்.

 

அகரனின் முன் காபியை நீட்டி இருந்தாள் தாரிகா. அவன் மட்டும் வருவான் என்று நினைத்து இருக்க அவனுடன் சேர்ந்து அபராஜித், அதர்வ், ரிதேஷ் எல்லாரும் வருவார்கள் என்று அவள் என்ன கனவா கண்டாள்?

 

அனைவருக்கும் காபி அருந்த போக, தாரிகாவோ ஆர்வமாக அவர்களை தான் பார்த்தாள்.

 

அபராஜிதன் விழிகளில் இருந்து தப்புமா என்ன?

 

அவனுக்கு ஏதோ ஒரு சந்தேகம் தீடிரென்று எழுந்து இருந்தது.

 

காபியை குடிக்கலாமா என்கிற எண்ணம் வேறு வந்தது. வேதசாலமோ அவருக்கு ஒரு அழைப்பு வரவும் அங்கே செல்ல, வாயில் காபியை வைத்த மற்ற மூவரின் வாயில் இருந்தும் காபி தெறித்து இருந்தது.

 

"காப்பில மிளகாய் தூள் சரியா இருக்கா?" என்று அனைவரையும் பார்த்து கேட்டாலே பார்க்கலாம்!

 

அபராஜிதன் விழிகள் அவளை தான் பார்த்தன. அவனின் சாணக்கிய மூளை அனைத்தையும் கோர்த்து விட்டது.

 

"நீ தான் என் கார் கண்ணாடியை உடச்சியா?" என்று கேட்கவும், அவளோ இல்லை என்று தலையசைத்து, "என் பிரண்ட்ஸ்" என்று சொல்லி இருந்தாள்.

 

"தண்ணி தண்ணி" என்று ரிதேஷ் கத்த, கொஞ்சம் இரக்கம் பார்த்தாள் போலும், அவள் வைத்து இருந்த பழரசத்தையும் கொடுத்தாள்.

 

மூவரும் வாங்கி பருகி இருந்தனர்.

 

அபராஜிதோ, அவனின் பாக்கட்டில் இருந்த கொலுசை எடுத்து காட்டி, "இது யாரோடாதோ அவளை வந்து என்கிட்ட இருந்து வாங்கிக்க சொல்லு" என்று சொல்லவும், அது சுப்ரியாவின் கொலுசு என்று கணித்தவள், "ஐயோ அது சுப்புவோட கொலுசு" என்று சொல்லவும், அகரனோ, "என்ன டி உன் பிரண்ட்ஸை விட்டு இப்படி அடிக்கிறியா?" என்று கேட்கவும், "ஆமாம் அப்படி தான் இப்போ என்ன பண்ணுவீங்க?" என்று எகிறிக்கொண்டு வர, அபராஜிதோ எழுந்து, "நாங்க என்ன பண்ணுவோம்னு காட்டுறோம்.. நீ வா அகரன்" என்று சொல்லி ரிதீஷையும் அதர்வ்வையும் ஒரு பார்வை பார்த்து சென்று விட்டான்.

 

வேதாச்சலம் வந்த பிறகு, அவர்களுக்கு ஏதோ வேலை சென்று விட்டார்கள் என்று மட்டும் சொல்லி இருந்தாள்.

 

அபராஜித்திற்கு மட்டும் அல்ல அதர்விற்கும் மனம் எரிந்தது. பெண்கள் அவர்களை வைத்து செய்து இருகிறார்கள்.

 

"உன் ஊர்ல தான் டா இருக்க போறோம்... என்ன ஆனாலும் சரி எனக்கு அந்த கொலுசுகாரிய பார்த்தே ஆகணும்" என்று அபராஜித் சொல்லிக்கொண்டே, அவர்களின் பக்கத்து தெருவில் நடந்து கொண்டு இருந்தனர்.

 

ஜானகியோ சரியாக அவர்கள் வரும் நேரத்தை பார்த்து, சாணியை அடித்து இருந்தாள். அவர்கள் உடை முழுதும் சாணி தான். அபராஜித் மற்றும் அதர்வ் ட்ஷர்ட்டில் தெறித்து இருந்தது, ரிதேஷின் முகத்தில் வேறு பாதி விழுந்து இருந்தது.

 

"யு பிளடி" என்று கத்தி இருந்தான் ரிதேஷ். அவளோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல், தெனாவட்டாக நின்று இருந்தாள்.

 

அகரனுக்கோ கோவம் தான். "ஜானகி என்ன டி கொழுப்பா? நாங்க வரோம்னு தெரியும் தானே?" என்று அவனின் ஊர்கார பெண் என்பதால் தைரியமாகவே பேசி இருந்தான்.

 

"தெரிஞ்சதுனால தான் அடிச்சேன்" என்று அப்போதும் அவனுக்கு பதில் கொடுத்து விட்டு, ரிதேஷை பார்த்து, "பிளடி கபடி எல்லாம் வேணாம்... ஒழுங்கா ஊர் போய் சேருங்க... வரட்டா" என்று சொல்லி விட்டு சென்று இருந்தாள்.

 

ரிதேஷோ அகரனை பார்த்து, "டேய்! இவனுங்க இரண்டு பேரு உன்னை வச்சி செஞ்சதுக்கு எல்லாம் ஊருக்கு கூட்டிட்டு வந்து, சொத்துலையும், செத்துலையும், இப்போ சாணிலையும் இப்போ அடிவாங்க வச்சிட்டல" என்று கத்தி இருந்தான்.

 

"அகரன்... இதோட உன் ஊரு பொண்ணுங்க காலி டா" என்று சொல்லி இருந்தார்கள் அதர்வ் மற்றும் அபராஜித்.

 

குறும்பும் கூத்துமாக இருக்கும் நாயகிகளுக்கு, கோவமும் அகங்காரமும் கொண்ட நாயகர்கள் சரியானவர்களாக இருப்பார்களா?



கருத்துகள்