இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 8

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 8

 

அன்றைய இரவு அகரனின் வீட்டில் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் போது, "எங்க ஊரு எப்படி இருக்கு ப்பா?" என்று கேட்டார் அகரனின் தந்தை.

 

"ம்கூம் எங்களை வச்சி செஞ்சிகிட்டு இருக்கு" என்று ரிதேஷ் முணுமுணுக்க, "என்ன ப்பா சொன்ன?" என்று கேட்டவரிடம், "உங்க ஊர் காரங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கனு சொன்னேன் அங்கிள்" என்று சொல்லவும், அகரனுக்கு சிரிப்பு வேறு வந்து விட்டது.

 

அதர்வ் மற்றும் அபராஜித் அவனை முறைக்கவும் அடங்கி விட்டான்.

 

"அங்கிள் காலைல ஜாகிங் எல்லாம் போலாம் தானே" என்று அபராஜித் கேட்கவும், "போகலாம் தம்பி... நாளைக்கு சனி கிழமை தானே! பெருசா வயக்காட்டுக்கும் யாரும் வர மாட்டாங்க... கூலி வாங்க கூட பத்து மணிக்கு மேல தான் வருவாங்க... நீங்க தரலாமா காலைல வெளிய போகலாம்" என்று சொல்லவும், சரி என்று தலையசைத்து கொண்டான்.

 

அன்றைய இரவு அனைவரும் சென்று உறங்கி இருந்தனர்.

 

நடுஇரவில் ஒரு கனவில் இருந்து விழித்து இருந்தான் அதர்வ். மீண்டும் மீண்டும் அதே கனவு? என்ன தான் உணர்த்த வருகிறது இந்த கனவு என்று அவனுக்கு தெரியவில்லை. அருகில் பார்த்தால் ரிதேஷ் தான் படுத்து இருந்தான்.

 

கொஞ்சம் சென்று தண்ணீர் எடுத்து குடித்தவன், பின்பு அப்படியே கண்ணயர்ந்து இருந்தான்.

 

தூக்கம் வருவேனா என்று இருந்தது.

 

அந்த ஒரு கனவு வந்தால் மட்டும் அவனால் தூங்கவே முடியாது. கடந்த சில வருடங்களாக இப்படி தான். ஆனாலும் எப்படியோ கண்களை மூடி நித்ரா தேவியை அழைத்து இருந்தான்.

 

அவளும் பாவம் பார்த்து அவனுக்கு உறக்கத்தை கொடுத்து இருந்தாள்.

 

அடுத்த நாள் காலை ஆறுமணிக்கே எழுந்து ஓட சென்று இருந்தான் அபராஜித்.

 

எப்போதும் வீட்டில் இருக்கும் ஜிமில் மட்டுமே ஓடுவான் அல்லது கிரிக்கெட் கிரௌண்ட். இப்படி திறந்த வெளியில் எல்லாம் இப்பொது அவனால் ஓட முடிவதில்லை. அவன் அடைந்து விட்ட உயரம் அப்படி!

 

வெளியே ரசிகைகள் தொல்லை, அல்லது மீடியா என்று சூழ்ந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் இங்கு தான் அப்படி கொஞ்சமே கொஞ்சம் இல்லை.

 

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடி இருப்பான். இப்பொது கதிரவனும் கொஞ்சம் அவனின் சூரிய கதிர்களை பரப்ப துவங்கி இருந்தான்.

 

அவனுக்கு இப்பொது கொஞ்சம் நடந்தால் நன்றாக இருக்கும் எனும் எண்ணம் தான்.

 

அபராஜித் அந்த வயல் வெளியில் நடந்து கொண்டு இருந்தான். இப்படி எல்லாம் அவனை சுதந்திரமாக ஊடகங்கள் விடுவதில்லை. எத்தனை நாள் ஆனது அவன் இப்படி தூய காற்றை எல்லாம் சுவாசித்து என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் அவனாக உணர்ந்து கொண்டு இருந்தான். ஒரு சாதாரண மனிதன் போல!

 

அவனின் எண்ணங்களோ சட்டென நேற்று கண்ணாடியில் கல் எடுத்து அவனின் கார் கண்ணாடியை அடித்து உடைத்து இருந்தவள் மங்கையின் பின்னால் சென்றது. யாரென்றே காணாத அந்த பெண் அவனின் காரின் கண்ணாடியையே உடைத்து இருக்கிறாளே! அவளை நிச்சயம் பார்க்க வேண்டும் என்றும் அவனது மனது தூண்டியது.

 

அவன் காலணி அணிந்து கொண்டு காற்றோட்டமாக நடந்து வர, "யோவ் அறிவில்ல உனக்கு? இப்படி செருப்பு போட்டுக்கிட்டு வயல்ல நடப்பாங்களா?" என்ற குரலில் உடனே திரும்பி பார்த்தான்.

 

அவனின் முன் நின்று இருந்தாள் ஐந்தரை அடி சிற்பம். அவளின் பக்கத்தில் ஒரு கருப்பு நிற நாயும் நின்று இருந்தது.

 

அவனின் கண்கள் அவளை தான் பார்த்தன. அவளின் முகத்தில் சிறு சஞ்சலம் கூட இல்லை. அவனை பார்த்ததும் அவனின் மேல் விழும் பெண்கள் தான் அதிகம்.

 

"என்ன யா இப்படி பார்க்குற? உன் வாழ்க்கைல பொண்ணையே பார்த்தது இல்லையா?" என்று கையில் கூடையுடன் நின்று கொண்டு இருந்தாள்.

 

அவனின் வாழ்வில் பெண்களை பார்த்தது இல்லையா? சியர் லீடர்ஸ், விமானத்தில் பணிப்பெண்கள், ஹோட்டலில் ஆடும் நடன மங்கைகள், இவ்வளவு ஏன் சினிமா நடிகைகள் உட்பட பல பெண்கள் அவனின் ஒரு பார்வைக்கு ஏங்குகிறார்கள். இவள் என்னவென்றால் இப்படி சொல்கிறாள்.

 

அவன் பேசவே இல்லை. அவளை தான் பார்த்தான். அதையும் தாண்டி அவள் வைத்து இருந்த நித்ய மல்லி வாசனை வேறு அவனின் மூக்கை சென்று அடைந்து இருந்தது. ஊரில் எல்லாம் நிறைய நித்ய மல்லி செடி இல்லாத வீடே இல்லை என்று சொல்லலாம். ஆனாலும் அவனிடம் இப்படி மல்லுக்கு நிற்கும் பெண்ணை பார்த்ததும் இவள் தான் அவளோ என்கிற எண்ணம் அவனின் மனதில் எழாமல் இல்லை.

 

"வாய்ல என்னை கொழுக்கட்டையா வச்சி இருக்க? பேசுறானா பாரு! இப்படி செருப்பு போட்டுக்கிட்டு வயலுக்கு வராத சொல்லிட்டேன். ஆளும் மண்டையும்..." என்று சொல்லிவிட்டு அவளும் அவளது நாயும் அவனை கடந்து செல்ல, "ஹே கேர்ள்!" என்று சொடக்கிட்டு அவன் அழைக்க, அவளும் திரும்பினாள்.

 

"உன் பேரு என்ன?" என்று புருவம் உயர்த்தி அவன் கேட்க, "ஏன் தெரிஞ்சிகிட்டு துரை என்ன பண்ண போறீரு" என்று எகத்தாளமாக பேச, அவனின் முகத்தில் சிறு சலனம் கூட இல்லை. அதே ஏகதாளத்துடன், "ஹான் பொண்டாட்டி ஆக்கிக்கலாம்னு இருக்கேன்" என்று உணர்ச்சியே இல்லாமல் பேசினான்.

 

அவளோ கழுத்தை நொடித்து கொண்டு, "ம்கூம் ஆசைதான் ஐயாவுக்கு.. போயா போ.. வீடு போய் சேறு... நேத்து தான் என் நண்பியை பொண்ணு பார்க்க வந்தவனோட நண்பன் கார் கண்ணாடியை உடைச்சி விட்டேன். உன் மண்டையையும் உடைக்க போறேன். இந்த சுப்ரியா கிட்ட வச்சிக்காத... என்னை பத்தி இந்த ஊர்ல கேட்டு பாரு... ஆளும் மண்டையும்.. நீ வா கருப்பு" என்றவள் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டாள்.

 

"சுப்ரியா" என்றவன் உதடுகள் தாமாக முணுமுணுத்தது. சொல்லி சென்றவளும் சரியாக அவனின் முகத்தை பார்க்கவில்லை. அதுவும் அவளுக்கு உண்மையாகவே கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் கிடையாது. அபராஜித் யார் என்று தெரியும் தான். ஆனாலும் நினைவு வைத்து கொள்ளும் அளவிற்கு அவளின் வாழ்வில் அவன் ஒன்றும் செய்து விடவில்லை.

 

அவளும் கூர்ந்து அவனை பார்க்கவில்லை. ஆனால் நான்கு அடி எட்டு வைத்ததும், அவன் அணிந்து இருந்த உடையை கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வந்தவள், அப்படியே திரும்பி அவனை பார்த்தாள். கருப்புவும் அவளது எஜமானி நிற்க நின்றது.

 

அவனும் அவளை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து இருந்தான். அவனின் முன்னே வந்து அவனின் காரின் கண்ணாடியை உடைத்து இருக்கிறேன் என்று சொல்லும் தைரியமான பெண் தான்.

 

அவனின் பார்வையை வைத்தே அவளுக்கு அவன் யார் என்று புரிந்து போனது. பின்பு அவனை விளம்பரத்தில் பார்த்த நினைவு வேறு வந்தது.

 

'ஆத்தி அவன் காரை அவன் கிட்டயே உடைச்சி இருக்கேன்னு சொல்லிருக்கேன். ஆறடி வளர்ந்தவன் வேற அப்படியே என்னை பார்குறானே' என்று நினைத்தவள், இதற்கு மேல் இங்கு இருந்தால் அவ்வளவு தான் என்று எண்ணி நகர போக, "ஹே கேர்ள்" என்று மீண்டும் அவனது அழைப்பில் திரும்பி இருந்தாள்.

 

அவளோ திரும்பி பார்த்து, "யோவ் அதான் என் பேரு சுப்ரியான்னு சொன்னேன்ல வேணும்னா சுப்புன்னு கூப்பிடு" என்று அவள் சொல்ல, "சுப்பு சோப்புன்னு எல்லாம் கூப்பிட முடியாது.. நீ என் கேர்ள்... ஐ மீன் ஹே கேர்ள் தான் எப்பவும்" என்று அவனின் வாயில் தெரியாமல் வந்த வார்த்தை தான் அவனது வாழ்க்கையும் போல!

 

"காரை உடைச்சிட்டு கொழுப்பு வேற உனக்கு" என்று அவன் கேட்க, "இப்போ என்ன காரை ஊட்டச்சத்தும் உங்க சொத்துல பாதி குறைஞ்சி போச்சா என்ன? உங்களுக்கு இதெல்லாம் ஒரு செலவா என்ன? கண்ணாடி உடைஞ்சதும் நீங்க அப்படியே திரும்பி போக வேண்டியது தானே" என்று அவள் பேசவும், "என்னை பார்த்தா எப்படி இருக்கு? கண்ணாடி ஒருத்தி உடைப்பாளாம்... இன்னொருத்தி கார காபி கொடுப்பாலம்... அடுத்து இன்னும் ஒருத்தி சாணியாள அடிப்பா.. நாங்க இதெல்லாம் வாங்கிட்டு அமைதியா போயிரணும்... ஆமா கண்ணாடில கல் அடிச்சது இரண்டு பிரண்ட்ஸ்ன்னு சொன்னாலே தரிக்கா" என்று அவன் சரியாக கேட்க, "அவ ரொம்ப நல்லவை நான் தான் கல் அடிச்சேன் அவ வெறும் கூட இருந்தா" என்று சொல்லி இருந்தாள்.

 

"பரவால்ல இந்த குரங்கு கூட்டத்துல ஒரு மனுஷியும் இருக்கா" என்றவன், மீண்டும் அவளை பார்த்து, "எல்லாத்துக்கும் சேர்த்து வாங்க ரெடியா இரு" என்று சொல்லிவிட்டு நகர்ந்து இருந்தான்.

 

அவளும், "சரி தான் போடா" என்று முணுமுணுத்து கொண்டே நகர்ந்து இருந்தாள்.

 

அன்றைய காலை உணவு உண்டு விட்டு, "காரை கல்லால அடிச்சவளே பார்த்துட்டேன். பேரு சுப்ரியாவாம்" என்று அபராஜித் சொன்னது தான் தாமதம், "அந்த ராங்கியா? அவ கிட்ட எல்லாம் பேசுறதே கஷ்டம் டா அபி.. அவ கிட்ட எவன் வாக்க பட போறானோ அவன் தான் பாவம்" என்று அகரன் சொல்ல, "அகரன் ப்ரோ, அபி ப்ரோவையே கட்டி வச்சிரலாம்... அவரை கட்டிக்க போறவளும் பாவம்னு சொல்றிங்க தானே.. இரண்டு பேருக்கும் சரியா இருக்கும்" என்று ரிதேஷ் சொல்ல, அதர்வ் சலிப்பாக தலையசைத்து இருந்தான்.

 

"சரி டா சும்மா வா கிரௌண்ட் கிட்ட போயிட்டு வரலாம்" என்று அகரன் அவர்களை அழைத்து கொண்டு சென்றான்.

 

அகரனுக்கு அங்கு வந்ததும் பழைய நினைவுகள். இங்கு தானே அவன் கிரிக்கெட் ஆட துவங்கியது.

 

"நல்லா மெயின்டெய்ன் பண்றீங்க டா" என்று அதர்வ் சொல்லவும், அவனும் தலையசைக்க, ரிதேஷ் தான், "எத்தனை நாள் தான் கிரௌண்ட்ல ஆடுவீங்க... வாங்க ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடலாம்..இங்க தான் மீடியா தொல்லை எல்லாம் இல்ல தானே" என்று சொல்லி அவர்களை தெருவில் கிரிக்கெட் ஆட அழைத்து சென்றான்.

 

பெரிதாக யாரும் இல்லாததால் பிரச்சனை இல்லை.

 

"பால் போடவா?" என்று அகரன் கேட்க, கண்களை சுழல விட்ட அபராஜித்தோ, ஒரு பத்து நொடி கழித்து, "இப்போ போடு" என்று சொல்லி இருந்தான்.

 

அதர்வ் ஒரு முறை புருவம் சுருக்கி பார்த்து விட்டு அப்படியே திரும்ப, அவனோ “ரிதேஷ் நீ போய் பேட்டை பிடி டா, நான் பால் போடுறேன்” என்றவன், அபராஜித் அருகில் போய் நிற்க, "டேய் நான் அவன் பக்கத்துல போய் நிக்குறேன்" என்று சொன்னதையும் கேட்காமல், "பரவால்ல டா ஒரு செஞ்க்கு ஆப்போசிட்ல ஆடலாம்" என்று அகரன் ஏன் அவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்று தெரியாமல் சொல்ல, அகரன் பந்தை வீச அதை அபராஜித் அடிக்க, அதே சமயம் அதர்வ் பந்தை எரிந்து இருந்தான்.

 

அதர்வ் போட்ட பந்தும் சரி, அபராஜித் அடித்த பந்தும் சரி அப்படியே சென்று அவர்கள் பின்னால் தலை மேல் பூக்கூடையை சுமந்து கொண்டு வந்த இளவஞ்சி மற்றும் சுப்ரியாவின் கூடையை சரியாக அடித்து பறக்க விட்டு இருந்தது.

 

அருகே இருந்த ஜானகியும் தரிக்காவும் கூட, "ஹப்பா ஜஸ்ட் மிஸ் இல்லனா உங்க தலை பறந்து இருக்கும் டி" என்று சொல்லி இருந்தார்கள்.

 

சுப்ரியா அவர்களை முறைத்து கொண்டு நிற்க, இளவஞ்சியோ அதர்வ்வை பார்த்தவள் அப்படியே கண்ணீருடன் மயங்கி சரிந்து இருந்தாள்.



கருத்துகள்