இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 14

 

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ!

பிறவி 14

 

சுப்ரியாவின் கால்கள் எல்லாம் கிடுகிடுக்க துவங்கியது. அவளுக்கு என்று இருக்கும் ஒரே ஜீவன் அவளது தந்தை தான். தங்கை இருந்தாலும் அவளே சின்னவள் அவளிடம் அரவணைப்பை எதிர்பார்க்க முடியாதே.

 

"சுப்பு வா டி" என்று அவளை இழுத்து கொண்டு வஞ்சி போகவும் பின்னாலேயே ஜானகி மற்றும் தாரிகாவுடன் நம் நாயகர்களும் சென்றார்கள்.

 

அகரனுக்கும் தெரியும் மணி எவ்வளவு நல்லவர் என்று!

 

ஆகையால் உடனடியாக சென்று அவரை சேர்த்து இருக்கும் மருத்துவமனையில் பார்க்க, "மைல்டு அட்டாக் தான், ஆஞ்சியோ பண்ணனும்" என்று மருத்துவர் சொல்லவும், அவளுக்கோ கையும் ஓடவில்லை, காலும் ஓட வில்லை.

 

"ஸ்டே எல்லாம் சேர்த்து டூ லக்ஸ் பெ பண்ணுங்க" என்று அவர்கள் சொல்லவும், அவளுக்கு உண்மையாகவே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

 

"வீட்ல நகை இருக்கு... அதை வச்சி காசு பிரட்டலாம்" என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே, "பீஸ் எல்லாம் பெ பண்ணியாச்சு... உடனே ஆஞ்சியோ ஏற்பாடு பண்ணுறோம்" என்று அதற்குள் அவளின் செவிகளில் எட்டி இருந்தது.

 

மருத்துவர் சொல்லி சென்றதே பத்து நிமிடங்களுக்கு முன்பு தான். ஆனால் அதற்குள் எப்படி?

 

சுப்ரியா அனைவரையும் பார்க்க, "அபி அண்ணா தான் டி பீஸ் கட்டினார்" என்று ஜானகி தான் சொல்லி இருந்தாள்.

 

அவளுக்கோ அதிர்ச்சி. ஆனாலும் இப்போதைக்கு அவளுக்கு எதுவும் நினைவில் வர வில்லை. அவளின் தந்தையை காண வேண்டும் என்பது மட்டும் தான் அவளது பிரதானமான எண்ணமாக இருந்தது.

 

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அனைத்தும் நல்ல படியாக முடிந்து இருந்தது. உள்ளே சென்று மணியை பார்த்த பிறகு தான் சுப்ரியாவிற்கு மூச்சே வந்தது என்று கூட சொலலலாம்.

 

"அப்பா" என்று சொல்லும் போதே உடைந்து விட்டாள்.

 

"ஏன் டா அழற? உன்னை ஒருத்தன் கைல பிடிச்சி கொடுத்துட்டா நான் நிம்மதியா இருப்பேன். நீ சின்னவளை பார்த்துக்குவ" என்று அவர் சொல்லவும், அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவே இல்லை.

 

அப்போது தான் சுற்றி பார்த்தார். அரசு மருத்துவமனை போல் இல்லை. ஏதோ தனியார் மருத்துவமனை என்று புரிந்தது.

 

"எப்படி காசு எல்லாம் சமாளிச்ச? அதுவும் இவளோ சீக்கிரம் எல்லாமே நடத்தி முடிச்சி இருக்க? நகை எல்லாத்தையும் வித்துட்டியா மா? உன் கல்யாணத்துக்குனு நான் சேர்த்து வச்சது" என்று அவர் சொல்லும் போதே, "இல்ல சித்தப்பா... காசு அபி அண்ணா தான் கொடுத்தார்" என்று தர்ஷன் சொல்லி இருந்தான்.

 

அபி, அதர்வ் எல்லாம் உள்ளே வர வில்லை. அகரன் மட்டும் தான் நின்று இருந்தான்.

 

"ஏன் பா அகரன் இதெல்லாம் அந்த தம்பி எதுக்கு பண்ணுச்சு?" என்று அவர் கேட்க, "அட ஏன் மாமா நீங்க வேற, அவன் அப்படி தான் எதுக்கு பண்ணுவான்னு எல்லாம் எங்களுக்கே தெரியாது. அவன் பண்ணாலும் கேள்வி கேட்க முடியாது. பண்ணலானாலும் பண்ண சொல்லி கேட்க முடியாது. அவன் ஒரு புரியாத புதிர்" என்று சொல்லவும், "தம்பியை உள்ள கூப்பிடுங்க" என்று சொல்லவும்,  தர்ஷன் தான் சென்று அவர்களை அழைத்து கொண்டு வந்தான்.

 

"எப்படி இருக்கீங்க அங்கிள்?" என்று அவரை பார்த்து புன்னகையுடன் அவன் கேட்க, அவரோ, "ஏன் தம்பி உங்களுக்கு இந்த வீண் செலவு?" என்று கேட்டவரை இடை மறைத்து, "இதுல என்ன அங்கிள் இருக்கு? இந்த ஊர்ல முதன்முதலா வீட்டுக்கு எங்களை கூப்பிட்டவர் நீங்க தான். அகரன் எங்க பிராண்ட் அதனால அவன் வீட்டுக்கு வந்தோம். அவன் பொண்ணு பார்க்க போறான்னு தான் தாரிகா வீட்டுக்கு போனோம். ஆனா இந்த ஊருக்கு வந்து, என் வீட்டுக்கு வாங்கனு முதல்ல நீங்க தான் உரிமையா கூப்பிட்டிங்க... நேத்து தான் உங்க வீட்ல வந்து சாப்பிட்டு போய் இருக்கோம். அந்த நன்றி கூட இல்லனா எப்படி?" என்று அவன் பேசியதை பார்த்து அகரனே வாயை பிளந்து தான் விட்டான்.

 

'இவளோ நல்லவன் எல்லாம் இல்லையே இவன்' என்று அவன் மனதில் நினைக்க, ரிதேஷோ, "ப்ரோ அபி ப்ரோக்கு ஏதோ ஆகிருச்சு" என்று சொல்ல, "அதே தான் டா எனக்கும் தோணுது" என்று சொன்ன அகரனை பார்த்து, "அப்படி எல்லாம் இல்ல... அவன் எல்லாம் தெளிவா தான் பன்றான்" என்று அதர்வ் சொல்லி இருந்தான்.

 

அவன் தான் அபியின் அனைத்து செயல்களின் பின்புலத்தையும் அறிவானே... அபியின் கண்கள் இப்பொது வரை படிந்து இருந்தது என்னவோ சுப்ரியாவின் மீது தான். அவள் அழுவதை பார்த்து அவனின் முகம் மாறி இருந்ததை கூட அவன் அவதானித்து இருந்தான்.

 

"என்ன டா தெளிவா இருக்கான்" என்று அகரன் கேட்க, "ஹான் நீ இங்க மாப்பிள்ளையாக வந்த... அவன் மாப்பிள்ளையாகிட்டு தான் இந்த ஊரை விட்டு போவான் பாரு" என்று அவன் சொல்ல, "அப்போ தாரிகாவை அபி ப்ரோ லவ் பன்றாரா?" என்று கேட்க ரிதேஷை பார்த்து முறைத்து, "டேய் லூசு அவ எல்லாம் தங்கச்சி மாதிரி.. இப்போ எல்லாம் மோதல்ல இருந்து தான் காதல் பிறக்குது தெரியுமா?" என்று புருவம் உயர்த்தி கேட்டான்.

 

அகரனின் கண்களும் சரி ரிதேஷின் கண்களும் சரி விரிந்தன.

 

"சுப்ரியாவா?" என்று இருவரும் கொஞ்சம் சத்தமாகவே கத்தி விட்டனர்.

 

"என்ன?" என்று சுப்ரியா இப்பொது அவர்களை பார்த்து கேட்கவும், அவர்களோ வேகமாக எதுவும் இல்லை என்று தலையசைத்து இருந்தனர்.

 

"உடம்பை பார்த்துக்கோங்க அங்கிள்" என்று சொல்லிவிட்டு அபி சுப்ரியாவை பார்த்து விட்டு வெளியே வந்து விட்டான்.

 

மற்றவர்களும் வெளியே வந்து விட்டு இருந்தனர்.

 

அகரனோ அவனை பிடித்து, "டேய் எதுக்கு நீ காசு கட்டுன?" என்று கேட்க, "அதான் சொன்னேனே" என்று அவன் தோளை உலுக்க, "அகரன் உங்க பிரண்டை காசு வாங்கிக்க சொல்லுங்க" என்று பின்னால் வந்து நின்றாள் சுப்ரியா.

 

அவள் இப்படி வந்து நிற்பாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

 

"சரி வாங்கிக்குறேன். முதல்ல உங்க அப்பா சரி ஆகட்டும்" என்று அவன் சொல்ல, "கண்டிப்பா காசு வாங்கிக்கணும்" என்று ஒற்றை விரலை நீட்டி அவள் சொல்லவும், "வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன்" என்று அவனும் தலையசைத்து இருந்தான்.

 

அவளோ திரும்பி செல்ல இருந்தவள், "ஆமா உண்மையாவே அப்பாக்காக தான் இதை பண்ணிங்களா?" என்று கேட்கவும், அவனோ, "இல்ல உன் அழற முகத்தை பார்க்க சகிக்கல அதான்" என்று சொல்லி இருந்தான்.

 

"ரொம்ப தான்" என்று அவள் என்னவோ சொல்லி சென்று விட்டாள். அவனின் இதழ்களிலோ ஒரு வித குறும்பு புன்னகை தேங்கி இருந்தது.

 

இரண்டு நாட்கள் அனைவருக்கும் மருத்துவமனையிலேயே சென்றது.

 

இதோ மணி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த அதே நாள், பஞ்சாயத்தும் கூடி இருந்தது.

 

அங்கே விருமாண்டியோ மீசையை முறுக்கி கொண்டு நின்று இருக்க, ஒரு பக்கம் மயில் நின்று இருந்தார்.

 

கண்களில் கண்ணீருடன் நின்று இருந்தாள் இளவஞ்சி.

 

அதர்வ், அபராஜித், ரிதேஷ் மற்றும் அகரனும் நின்று இருந்தார்கள்.

 

பஞ்சாயத்து தலைவரோ, "அப்போ ஆரம்பிக்கலாமா?" என்று கேட்ட அதே நேரத்தில் தான், அங்கே வந்து நின்றது ஒரு உயர் ரக கார்.

 

அதில் இருந்து இறங்கியவரை பார்த்ததும் வஞ்சியின் கால்கள் நடுங்க துவங்கியது.

 



கருத்துகள்